தமிழகத்தில் ஏப்ரல் 23-ம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது.. தேர்தலுக்கு இன்னும் சில நாட்களே உள்ள நிலையில் அரசியல் களம் சூடுபிடிக்க தொடங்கி உள்ளது. அரசியல் தலைவர்கள் பலர் ஏற்கனவே பிரச்சாரத்தை தொடங்கிவிட்ட நிலையில், விஜய் நாளை பெரம்பூரில் இருந்து தேர்தல் பிரச்சாரத்தை தொடங்குகிறார்.. தேர்தலில் அவர் பெரம்பூரில் போட்டியிட உள்ளதாக கூறப்படும் நிலையில் பெரம்பூரில் இருந்தே தனது பிரச்சாரத்தை தொடங்குகிறார்.. பெரம்பூர், கொளத்தூர், வில்லிவாக்கம், அண்ணாநகர், விருகம்பாக்கம் ஆகிய 5 இடங்களில் இன்று விஜய் பிரச்சாரம் செய்யவிருந்தார்..
ஆனால் இன்று பெரம்பூர் தொகுதியில் எம்.கே.பி நகர் பேருந்து நிலையம் அருகே விஜய் பிரச்சாரம் செய்ய காவல்துறை அனுமதி மறுத்துள்ளது. தவெக தரப்பில் 3000 நபர்கள் வருவார்கள் என்று தெரிவிக்கப்பட்ட நிலையில், 3000 பேருக்கு இடம் போதாது என்று காவல்துறை தரப்பு தெரிவித்துள்ளது. மாற்று இடம் கேட்டு விண்ணப்பம் தர காவல்துறை தரப்பு அறிவுறுத்தி உள்ளது..
இந்த நிலையில் தனது பிரச்சாரத்திற்கு அனுமதி மறுக்கப்பட்டதற்கு விஜய் கண்டனம் தெரிவித்திருந்தார்.. இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் “ தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பில் திட்டமிடப்பட்ட பரப்புரைக்குச் சென்னை மாநகரக் காவல் துறையும், அதிகாரிகள் சிலரும் இணைந்து முட்டுக்கட்டை போட்டிருப்பது, ஜனநாயகத்தின் மீது நடத்தப்பட்டுள்ள ஒரு பாசிசத் தாக்குதலே ஆகும்.
தற்போது அந்த இடம் பிரசாரம் செய்வதற்கு உகந்ததல்ல என்று அனுமதி மறுக்கப்பட்டு, தமிழக வெற்றிக் கழகத்தின் மனு நிராகரிக்கப்பட்டுள்ளது. இப்படி அதிகாரிகள் சிலரின் துணையுடன் த.வெ.க.விற்கு எதிராகச் செயல்படும் திமுக காபந்து அரசுக்கு வெட்கமாக இல்லையா?
தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பில் நான் தேர்தல் பிரசாரம் மேற்கொள்ள முயற்சி செய்யும் போதெல்லாம், தி.மு.க. அரசு ஏதேதோ காரணங்களைக் கூறி, அனுமதியைத் தாமதிப்பதும் அல்லது அனுமதி மறுப்பதும் தொடர்கதையாகி வருகிறது.
மக்களின் பேராதரவைப் பெற்ற ஒரு புதிய அரசியல் கட்சியின் ஜனநாயக உரிமைகளைத் திட்டமிட்டு நசுக்கும் இந்தச் செயல், ஆளுங்கட்சியின் ஏவலர்களாக அதிகாரிகள் சிலர் செயல்படுகிறார்களா என்ற எண்ணத்தை ஏற்படுத்துகிறது. அத்துடன் “எங்களுக்கு எதிராக யார் உருவெடுத்தாலும் அவர்களை அதிகார பலத்தால் நசுக்குவோம்” என நினைப்பது அப்பட்டமான அடக்குமுறையே ஆகும்.
தமிழக வெற்றிக் கழகத்தைக் கண்டு தி.மு.க. எந்த அளவிற்கு அஞ்சுகிறது என்பதற்கு இந்தத் தடையே சாட்சி. எனவே, வரும் சட்டமன்றத் தேர்தலில் ஜனநாயக விரோதத் தி.மு.க. ஆட்சியைத் தமிழக மக்கள், வீட்டிற்கு அனுப்பப் போவது உறுதி!” என்று கூறியிருந்தார்.
இந்த நிலையில் விஜய்யின் இந்த கருத்துக்கு அமைச்சர் மா.சுப்பிரமணியன் பதிலடி கொடுத்துள்ளார்.. சென்னையில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய அவர் “ பிரச்சாரத்திற்கு யார் அனுமதி தருவார்கள் என்பதை விஜய் தெரிந்து கொள்ள வேண்டும்.. தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்த பின்னர் எந்த நிகழ்ச்சியாக இருந்தாலும், 48 மணி நேரத்திற்கு முன்பு ஆன்லைனில் விண்ணப்பித்தால் போதுமானது.. அரசியல் கட்சிகளின் கூட்டத்திற்கு தேர்தல் ஆனையம் தான் அனுமதி அளிக்கும்.. பெரம்பூரில் தவெக பரப்புரைக்கு அனுமதி மறுக்கப்பட்டதற்கும் அரசுக்கும் எந்த தொடர்பும் இல்லை..” என்று தெரிவித்துள்ளார்..
Read More : கொங்கு மண்டலத்தை தட்டி தூக்க திமுக போடும் ஸ்கெட்ச்..! செந்தில் பாலாஜியின் மாஸ்டர் பிளான் கை கொடுக்குமா..?



