அரியலூரில் அமைந்துள்ள ஶ்ரீ ஆலந்துறையார் திருக்கோயில் மிகவும் சிறப்பு வாய்ந்த கோயிலாக இருந்து வருகிறது. 600 ஆண்டுகள் பழமைவாய்ந்த திருகோயிலாக இருந்து வரும் இக்கோயிலில் ஒவ்வொரு வருடமும் ஜூன் மாதத்தில் அஷ்டபந்தன மகாகும்பாபிஷேகம் விழா நடைபெறுவது வழக்கம்.
மேலும் இக்கோயிலில் அமைந்துள்ள லிங்கம் சிலை மிகவும் சிறியதாக இருக்கும். இதனால் லிங்கத்தின் மீது குவளை ஒன்று வைக்கப்பட்டுள்ளது. சிவலிங்கம் மற்றும் குவளைக்கு தினமும் சாம்பிராணி தைலம் பூசப்பட்டு வருகிறது. பரசுராமர் தன் தாய் ரேணுகா தேவியை கொன்ற பாவத்தை போக்குவதற்காக இக்கோயிலுக்கு வந்து வேண்டி பாவத்தை போக்கியதாக சாஸ்திரத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மற்ற எந்த கோயில்களிலும் இல்லாத அளவிற்கு பரசுராமர் இக்கோயிலில் சயனத்தில் அமர்ந்திருப்பது போலவும், விநாயகர் நடனம் ஆடுவது போலவும் சிலை வடிவமைக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு வருடமும் பங்குனி 18 ஆம் தேதியன்று மட்டுமே சூரியன் தன் கதிர்களால் சிவலிங்கத்தை வழிபட்டு செல்கிறது என்பது இக்கோயிலின் சிறப்பாக இருந்து வருகிறது.
இதன்படி ஆலந்துரையார் திருக்கோயிலில் அமைந்துள்ள பரசுராம தீர்த்தத்தில் செவ்வாய், வெள்ளியன்று நீராடி சிவனை மனம் உருக வேண்டி பரசுராமருக்கு பரிகாரம் செய்தால் பிரம்மஹத்தி தோஷம் நீங்கும். மேலும் பிரிந்துள்ள கணவன் மனைவி ஒன்று சேர்வார்கள் என்பது இங்கு வரும் பக்தர்களின் நம்பிக்கையாக இருந்து வருகிறது.