1 மாதத்திற்கும் மேலாக நடந்து வரும் இஸ்ரேல் – ஈரான் போர் மேலும் தீவிரமடைந்து வருகிறது.. அமெரிக்கா, இஸ்ரேலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக ஈரான் வளைகுடா நாடுகள் மீது தாக்குதல் நடத்தி வருகிறது.. அந்த வகையில் மேற்கு ஈரானின் மீது பறந்த இரண்டாவது அமெரிக்க ஐந்தாம் தலைமுறை F-35 ரக விமானம் ஈரானிய படைகளால் சுட்டு வீழ்த்தப்பட்டதாக ஈரான் இன்று கூறியிருந்தது..
இந்த நிலையில் F-35 ரக போர் விமானத்திலிருந்து வெளியேறிய அமெரிக்க விமானி ஒருவர், இஸ்லாமியப் புரட்சிகரப் பாதுகாப்புப் படையால் (IRGC) சிறைப்பிடிக்கப்பட்டிருக்கலாம் என ஈரானின் தஸ்னிம் செய்தி நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது. அந்த விமானம் IRGC விண்வெளிப் படையால் தாக்கப்பட்டதாக IRGC கூறியது.
விமானி பிடிக்கப்பட்டதாக ஈரான் அரசாங்கத்துடன் தொடர்புடைய தகவல்கள் தெரிவித்தன. முன்னதாக, விமானியை உயிருடன் பிடிப்பவருக்கு வெகுமதி வழங்கப்படும் என ஈரான் அறிவித்திருந்தது. IRGC படையின் புதிதாகப் பயன்படுத்தப்பட்ட வான் பாதுகாப்பு அமைப்பு மூலம் அந்த விமானம் வீழ்த்தப்பட்டதாகத் தெரிவித்துள்ளது.
விமானத்திலிருந்து வெளியேற்றப்பட்ட விமானி உயிருடன் இருப்பதாக நம்பி, அவரை ஈரானின் எல்லையிலிருந்து மீட்க அமெரிக்கா முயன்றதற்கான அறிகுறிகள் இருந்ததாகவும், ஆனால் இறுதியில் ஈரான் படைகள் அவரைக் கைது செய்ததாகவும் கூறப்படுகிறது..


