பிரபல சின்னத்திரை நடிகை சுபாஷினி, சென்னையில் உள்ள தனது வீட்டில் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டார்.
சன் டிவியில் ஒளிப்பரப்பாகி வரும் கயல் சீரியலில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வந்தவர் சுபாஷினி. இலங்கையை சேர்ந்த இவர் படப்பிடிப்பு காரணமாக சென்னை ஐயப்பன்தாங்கலில் உள்ள தனியார் அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வந்தார். இவரது கணவர் பிப்பின் பெங்களூரில் வசித்து வருகிறார். இந்த நிலையில், நேற்று இரவு தனது கணவருடன் வீடியோ கால் பேசிய போது ஏற்பட்ட குடும்ப தகராறு காரணமாக மனம் உடைந்து தற்கொலை செய்து கொண்டார்.
போலீசாரின் முதற்கட்ட விசாரணைத் தகவல்களின்படி, சுபாஷினிக்கும் அவரது கணவருக்கும் இடையே கடந்த சில நாட்களாகக் குடும்பத் தகராறு இருந்து வந்ததாக கூறப்படுகிறது. சம்பவத்தன்று கணவருடன் வீடியோ கால் பேசிக்கொண்டிருந்த போது மீண்டும் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதனால் ஏற்பட்ட மன உளைச்சலில் இந்த விபரீத முடிவை எடுத்ததாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது சுபாஷினி தூக்கில் தொங்கிய நிலையில் மீட்கப்பட்டார். சுபாஷினியின் உடலைக் கைப்பற்றிய போலீசார், பிரேதப் பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Read more: இரவு முழுவதும் ஏசியில் தூங்குறீங்களா..? இந்த பக்க விளைவுகளை தெரிஞ்சிக்கோங்க..!



