சீனாவின் ஹுனான் மாகாணத்தில் உள்ள பட்டாசு தொழிற்சாலையில் ஏற்பட்ட பயங்கர வெடிவிபத்தில் குறைந்தது 21 பேர் உயிரிழந்ததாகவும், 60க்கும் மேற்பட்டோர் காயமடைந்ததாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
இந்த சம்பவம் திங்கட்கிழமை மாலை சுமார் 5 மணியளவில் லியுயாங் நகரில் உள்ள குவாண்டு பகுதியில் அமைந்துள்ள பட்டாசு தொழிற்சாலையில் ஏற்பட்டுள்ளது. பட்டாசு உற்பத்திக்குப் பிரசித்திபெற்ற ஹுனான் மாகாணம் பகுதியில் இந்த வெடிவிபத்து நிகழ்ந்ததால் பெரும் அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது.
வெடிவிபத்துக்குப் பிறகு தீயணைப்பு மற்றும் அவசர மீட்பு குழுக்கள் உடனடியாக சம்பவ இடத்திற்கு அனுப்பப்பட்டு மீட்புப் பணிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டன. நிலைமையை கட்டுப்படுத்துவதற்கான முயற்சிகள் தொடர்ந்து நடைபெற்று வருவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவத்தில் இதுவரை 21 பேர் உயிரிழந்துள்ளனர்.
காயமடைந்த 61 பேர் அருகிலுள்ள மருத்துவமனைகளுக்கு கொண்டு செல்லப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். அவர்களின் உடல்நிலை குறித்த முழுமையான தகவல்கள் இன்னும் வெளியிடப்படவில்லை. இந்த சம்பவம் குறித்து விசாரணை நடைபெற்று வருவதாகவும், வெடிவிபத்துக்கான காரணம் இதுவரை உறுதியாக தெரியவில்லை என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இதனிடையே, ஷி ஜின்பிங் சம்பவம் குறித்து முழுமையான விசாரணை நடத்தி, பாதுகாப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்துமாறு உத்தரவிட்டுள்ளார். மேலும், பிரதமர் லி கியாங்வும் தொழிற்துறைகளில் பாதுகாப்பு விதிகளை கடுமையாக அமல்படுத்த வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.



