தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் சில நாட்களே உள்ள நிலையில் அரசியல் களம் அனல் பறந்து வருகிறது.. இந்த தேர்தலில் திமுக கூட்டணி, அதிமுக கூட்டணி, நாம் தமிழர், தவெக என 4 முனைப் போட்டி நிலவுகிறது.. ஆட்சியை தக்க வைத்துக் கொள்ள வேண்டும் என்று திமுக, ஆட்சியை பிடிக்க வேண்டும் என்று அதிமுகவும் தேர்தல் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்..
இந்த தேர்தலில் புதிதாக களம் காணும் தவெகவும் தேர்தலுக்கு தயாராகி வருகிறது. முதல் தேர்தலிலேயே ஆட்சியை பிடிப்போம் என்று அக்கட்சி தலைவர் விஜய் கூறி வருகிறார்.. தவெக சார்பில் போட்டியிடும் 234 தொகுதிகளுக்கும் வேட்பாளர்களை சமீபத்தில் அக்கட்சி தலைவர் விஜய் அறிமுகம் செய்து வைத்தார்.. விஜய் பெரம்பூர், திருச்சி கிழக்கு ஆகிய இரண்டு தொகுதிகளில் போட்டியிடுகிறார்.. கடந்த 30-ம் தேதி பெரம்பூரில் விஜய் வேட்பு மனுவை தாக்கல் செய்தார்.. அன்றைய தினமே பெரம்பூரில் இருந்து தனது பிரச்சாரத்தையும் விஜய் தொடங்கினார்..
இதை தொடர்ந்து திருச்சி கிழக்கு தொகுதியில் வேட்புமனு தாக்கல் செய்த விஜய், திருச்சியிலும் பிரச்சாரம் மேற்கொண்டார்.. ஆனால் தன் மீதான வழக்குகள் பெரம்பூர் வேட்புமனுவில் எதுவும் குறிப்பிடாத விஜய் திருச்சி கிழக்கு வேட்பு மனுவில் குறிப்பிட்டிருந்தார்.
மேலும் விஜய் தாக்கல் செய்த வேட்பு மனுவில் தனது வயதையும் மாற்றி மாற்றி குறிப்பிட்டுள்ளார்.. கடந்த 30-ம் தேதி பெரம்பூரில் தாக்கல் செய்த விஜய் தனது வயதை 52 என்று குறிப்பிட்டுள்ளார்.. கடந்த 3-ம் தேதி திருச்சி கிழக்கு தொகுதியில் தாக்கல் செய்த வேட்பு மனுவில் தனது வயது 51 என்று விஜய் குறிப்பிட்டுள்ளார்.. குற்ற வழக்கு, வயது தொடர்பான விவரங்களை விஜய் மாற்றி மாற்றி குறிப்பிட்டிருப்பது சர்ச்சையாகி உள்ளது.. பெரம்பூர், திருச்சி கிழக்கு மாறுபட்ட தகவல்களை தெரிவித்திருப்பதால் விஜய்யின் வேட்பு மனு நிராகரிக்கப்பட வாய்ப்பிருப்பதாகவும் கூறப்பட்டது.
இதையடுத்து கடந்த 4-ம் தேதி பெரம்பூர் தொகுதிக்கான திருத்தப்பட்ட கூடுதல் மனுவை விஜய் தாக்கல் செய்தார்.. அதாவது விடுபட்ட கூடுதல் தகவலை ஒரு Supplementary/ Additional Affidavit ஆக மீண்டும் தாக்கல் செய்தார்.. அதில் விஜய் மீதான வழக்குகள் குறித்த விவரங்கள் சேர்க்கப்பட்டது.. மேலும் விஜய் பெயரில் ரூ.6 கோடி மதிப்பிலான பிரச்சார வாகனம் பற்றிய தகவல்கள் சேர்க்கப்பட்டன.. விஜய்யின் வயது தொடர்பான விவரங்களும் சேர்க்கப்பட்டன..
இந்த நிலையில் விஜய் பெரம்பூர் தொகுதியில் புதிய பிரமாண பத்திரத்தை தாக்கல் செய்தார்.. விஜய் சார்பில் திருத்தப்பட்ட வேட்புமனுவுக்கு பதிலாக, அனைத்து தகவல்களையும் உள்ளடக்கிய புதிய பிரமாணப் பத்திரம் இன்று தாக்கல் செய்யப்பட்டது.. பெரம்பூர் தவெக மாவட்ட செயலாளர் சிவா தேர்தல் அதிகாரி கீதாவிடம் புதிய பிரமாண பத்திரத்தை தாக்கல் செய்தார்.. விஜய் தனது வேட்பு மனுவில் திருத்தம் செய்வது இது 3-வது முறையாகும்..



