ஒவ்வொரு காலையும் உண்ணும் உணவுதான் நாள் முழுவதும் உங்களுக்குத் தேவையான ஆற்றலை அளிக்கிறது. காலையில் நீங்கள் எதை வேண்டுமானாலும் காலை உணவாகச் சாப்பிடுவது உங்களுக்கு கல்லீரல் பிரச்சனைகளை ஏற்படுத்தக்கூடும். குறிப்பாக வெளிநாடுகளில் அதிகம் பயன்படுத்தப்படும் “வெள்ளை ரொட்டி” போன்ற சுத்திகரிக்கப்பட்ட உணவுகளை தினமும் அதிக அளவில் எடுத்துக்கொள்வது கல்லீரலுக்கு தீங்கு விளைவிக்கலாம் என தெரிவிக்கப்படுகிறது.
வெள்ளை ரொட்டியை வெண்ணெய் அல்லது ஜாமுடன் சேர்த்து இதை உட்கொள்வது பலரின் தினசரி வழக்கமாக மாறியுள்ளது. ஆனால், மைதா மாவில் தயாரிக்கப்படும் இந்த வெள்ளை ரொட்டி, நார்ச்சத்து குறைவாகவும், உடலில் சர்க்கரை அளவை வேகமாக உயர்த்தும் தன்மையும் கொண்டதாக இருப்பதால், நமது உடல்நிலைக்கும் காலநிலைக்கும் ஏற்றதல்ல என்று நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.
இதனால், உடல் எடை அதிகரிப்பு, கல்லீரலில் கொழுப்பு சேர்வு, நீரிழிவு அபாயம் போன்ற பிரச்சனைகள் உருவாகும் வாய்ப்பு இருப்பதாகவும் தெரிவிக்கப்படுகிறது. வெள்ளை ரொட்டி பொதுவாக பதப்படுத்தப்பட்ட மாவில் இருந்து தயாரிக்கப்படுகிறது. இதில் நார்ச்சத்து மிகக் குறைவாக இருப்பதுடன், பதப்படுத்தப்பட்ட கார்போஹைட்ரேட் அதிகமாக காணப்படுகிறது.
இதனால், இந்த உணவை உட்கொள்ளும் போது அது உடலில் சர்க்கரை போலவே செயல்பட்டு, இரத்தச் சர்க்கரை அளவை திடீரென உயர்த்தும் தன்மை கொண்டதாக நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். மேலும், இவ்வகை பதப்படுத்தப்பட்ட மாவுச்சத்துகளை தொடர்ந்து அதிகமாக உட்கொள்வது, கல்லீரலில் கொழுப்பு சேர்வதற்கு வழிவகுக்கும். இந்த நிலை “ஆல்கஹால் அல்லாத கொழுப்பு கல்லீரல் நோய்” (Non-Alcoholic Fatty Liver Disease) என அழைக்கப்படுகிறது.
அதிக அளவில் வெள்ளை ரொட்டி சாப்பிடுவது இன்சுலின் எதிர்ப்பை (Insulin Resistance) அதிகரிக்கவும் காரணமாகிறது. இது பின்னர் இரண்டாம் வகை நீரிழிவு நோய் மற்றும் பல்வேறு கல்லீரல் தொடர்பான பிரச்சனைகளுக்கு வழிவகுக்கும் அபாயம் உள்ளதாக மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர்.
வெள்ளை ரொட்டி சாப்பிடுவதால் ஏற்படும் உடல் நலப்பிரச்சனைகள்:
நிபுணர்கள் கூறுவதாவது, வெள்ளை ரொட்டியை தொடர்ந்து சாப்பிடுவது உடலில் சோர்வு ஏற்படுத்தி, வயிற்று உப்புசம் அதிகரிக்கச் செய்யும். மேலும், தோல் மஞ்சள் நிறமாதல், பசியின்மை போன்ற பிரச்சனைகளுக்கும் இது காரணமாக இருக்கலாம். இவ்வாறான பழக்கம் உடலை மெதுவாக பலவீனப்படுத்தும் என்றும் எச்சரிக்கப்படுகிறது.
குறிப்பாக, தினமும் வெள்ளை ரொட்டி சாப்பிடுபவர்கள் தற்போது ஆரோக்கியமாக இருந்தாலும், காலப்போக்கில் கல்லீரல் செயல்பாடு பாதிக்கப்படுவதற்கான வாய்ப்பு அதிகம் என தெரிவிக்கப்படுகிறது. காலை உணவு உடல்நலத்தில் முக்கிய பங்கு வகிப்பதால், அது சத்தானதாக இருக்க வேண்டியது அவசியம். சிறிய தவறும் ஆரோக்கியத்தில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும் என மருத்துவர்கள் வலியுறுத்துகின்றனர்.இதற்குப் பதிலாக, ஓட்ஸ், முளைக்கட்டிய பயறு கொண்டு தயாரிக்கும் இட்லி, காய்கறி சாலட் போன்ற சத்தான உணவுகளை காலை உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும் என பரிந்துரைக்கப்படுகிறது.



