தமிழக அரசியல் களம் 2026 சட்டமன்றத் தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு அதிரடி மாற்றங்களை சந்தித்து வருகிறது. நீண்டகாலமாக தமிழகத்தை ஆட்சி செய்து வந்த திராவிட முன்னேற்றக் கழகம் மற்றும் அதிமுக போன்ற கட்சிகளை பின்னுக்கு தள்ளி, தமிழக வெற்றிக் கழகம் 108 இடங்களில் வெற்றி பெற்று தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ளது.
இந்த தேர்தலில் விஜய் பெரம்பூர் மற்றும் திருச்சி கிழக்கு ஆகிய இரு தொகுதிகளில் போட்டியிட்டு இரண்டிலும் வெற்றி பெற்றார். பின்னர் முதல்வராக பதவியேற்க உள்ள நிலையில், விதிமுறைகளின்படி ஒரு தொகுதியை ராஜினாமா செய்ய வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. இதனிடையே, அவர் திருச்சி கிழக்கு தொகுதி எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்ய இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதனால், அங்கு இடைத்தேர்தல் நடைபெறும் சூழல் உருவாகியுள்ளது. சட்டப்படி 6 மாதங்களுக்குள் இந்த இடைத்தேர்தல் நடத்தப்பட வேண்டியதால், அரசியல் கட்சிகள் தங்களது வியூகங்களை தீவிரப்படுத்தி வருகின்றன.
இந்நிலையில், இந்த இடைத்தேர்தலில் மு.க. ஸ்டாலின் நேரடியாக களமிறங்கலாம் என்ற தகவல் வெளியாகியுள்ளது.
கொளத்தூர் தொகுதியில் ஏற்பட்ட தோல்விக்குப் பிறகு, மீண்டும் சட்டமன்றத்திற்குள் நுழைய இந்த இடைத்தேர்தலை ஒரு வாய்ப்பாக திமுக பார்க்கிறது. அதேசமயம், அந்த தொகுதியில் உருவாகியிருக்கும் அனுதாப அலைவை வெற்றியாக மாற்றும் முயற்சியிலும் திமுக ஈடுபட்டு வருவதாக கூறப்படுகிறது.
மறுபுறம், ஆட்சியில் இருக்கும் தவெகவும் இந்த இடைத்தேர்தலை மிக முக்கியமாகக் கருதி பல்வேறு விருப்பங்களை பரிசீலித்து வருகிறது. முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி சகாயம் பெயர் வலுவாக பேசப்படுகிறது. கனிம வளக் கொள்ளை உள்ளிட்ட விவகாரங்களில் கடுமையான நிலைப்பாடு எடுத்திருந்த அவர், பொதுமக்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றவர் என்பதால், அவரை களமிறக்குவது தவெகவுக்கு வலுவான அரசியல் நகர்வாக அமையும் என கருதப்படுகிறது.
அதே நேரத்தில், முன்னாள் அமைச்சர் கு.ப. கிருஷ்ணன் போன்ற அனுபவம் வாய்ந்தவர்களும் பரிசீலனையில் உள்ளனர். தொகுதியில் சமூக சமநிலையை கருத்தில் கொண்டு வேட்பாளர் தேர்வு செய்யப்படலாம் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனால், இந்த இடைத்தேர்தல் வெறும் தொகுதி போட்டியாக இல்லாமல், தமிழக அரசியலின் அடுத்த கட்டத்தை தீர்மானிக்கும் முக்கியமான மோதலாக மாறும் என அரசியல் ஆய்வாளர்கள் மதிப்பிடுகின்றனர்.
Read more: ‘மரியாதைக்குரிய தமிழ்நாடு முதலமைச்சர் விஜய்’ ஆளுநர் மாளிகை வெளியிட்ட குறிப்பால் சர்ச்சை..!



