ஹார்முஸ் ஜலசந்தியில் இந்தியக் கொடி ஏந்திய இரண்டு கப்பல்கள் மீது ஈரானிய ராணுவம் துப்பாக்கிச் சூடு நடத்தியதாக தகவல் வெளியாகி சர்வதேச அளவில் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. சம்பவத்தையடுத்து, அந்த கப்பல்கள் தங்கள் பயண பாதையை மாற்றிக் கொண்டதாக கூறப்படுகிறது.
இந்த விவகாரம் தொடர்பாக மத்திய அரசு உடனடியாக நடவடிக்கை எடுத்து, இந்தியாவில் உள்ள ஈரானிய தூதரை வரவழைத்து கடும் கண்டனத்தை பதிவு செய்துள்ளது. இதற்கிடையில், இந்தியாவில் உள்ள ஈரான் உச்சத் தலைவரின் பிரதிநிதி டாக்டர் அப்துல் மஜித் ஹகிமி எலாஹி ஞாயிற்றுக்கிழமை முக்கிய அறிக்கையை வெளியிட்டார். அதில், “இந்தியாவுடனான எங்கள் உறவு மிகவும் வலுவானது. ஹார்முஸ் ஜலசந்தி வழியாக இந்தியா தனது எண்ணெய் போக்குவரத்தில் பயன் அடைந்துள்ளது” என்று அவர் தெரிவித்தார்.
மேலும், நரேந்திர மோடி மற்றும் மசூத் பெஜேஷ்கியன் இடையே நடைபெற்ற பேச்சுவார்த்தைகள் இருநாடுகளின் உறவை மேலும் வலுப்படுத்தியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார். இந்தியா–ஈரான் உறவு குறித்து பேசும்போது, இரு நாடுகளுக்கும் இடையே 5,000 ஆண்டுகளுக்கும் மேலான வரலாற்று பிணைப்பு இருப்பதாகவும், கலாச்சாரம், கல்வி மற்றும் மனிதாபிமான அடிப்படையில் உறவு வலுவாக தொடர்கிறது என்றும் அவர் கூறினார்.
ஆனால், துப்பாக்கிச் சூடு சம்பவம் குறித்து நேரடியாக பதிலளிக்கையில், “அந்த சம்பவம் குறித்து முழுமையான தகவல் இல்லை. அது விரைவில் சரியாகும் என நம்புகிறோம்” என்றார். பிராந்தியத்தில் அதிகரிக்கும் பதற்றம் குறித்து கவலை தெரிவித்த அவர், “எங்களுக்கு போர் தேவையில்லை. அமைதியே எங்கள் நோக்கம். எல்லா தரப்பினரும் அமைதியை கடைப்பிடிக்க வேண்டும்” என்று வலியுறுத்தினார்.
குறிப்பாக, ஹார்மூஸ் உலகின் முக்கியமான எண்ணெய் போக்குவரத்து வழித்தடங்களில் ஒன்றாக இருப்பதால், அங்கு ஏற்படும் எந்தவொரு இடையூறும் இந்தியா உள்ளிட்ட பல நாடுகளின் பொருளாதாரத்துக்கு தாக்கத்தை ஏற்படுத்தும் என நிபுணர்கள் எச்சரிக்கின்றனர். இந்நிலையில், பாதுகாப்பு காரணங்களால் ஹார்முஸ் ஜலசந்தி தற்காலிகமாக மூடப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இது விரைவில் திறக்கப்படும் என ஈரான் தரப்பு நம்பிக்கை தெரிவித்துள்ளது.
Read more: உஷார்.. சிக்கனின் இந்த பாகங்களை சாப்பிட்டால் பல உடல் நலப்பிரச்சனைகள் வரலாம்..!



