தமிழ் சினிமாவில் இயக்குனர் இமயம் என்று அழைக்கப்பட்ட பாரதிராஜா உடல்நலக்குறைவு காரணமாக இன்று காலமானார்.. சென்னையில் உள்ள அவரது இல்லத்தில் மருத்துவர்கள் கண்காணிப்பில் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் அவரின் உயிர் இன்று பிரிந்தது.. அவருக்கு வயது 84. அவரின் மறைவு திரைப்பிரபலங்கள் அரசியல் தலைவர்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்..
1977-ம் ஆண்டு வெளியான 16 வயதினிலே படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர்.. தனது முதல் படத்திலேயே ரஜினிகாந்த், கமல்ஹாசன், ஸ்ரீதேவி என முன்னணி நட்சத்திரங்களை இயக்கி கவனம் பெற்றார்.. ஸ்டூடியோக்களில் இருந்த சினிமாவை கிராமத்து மண் வாசனைக்கு மாற்றியவர்..
கிராமத்து வாழ்க்கையையும் மண்ணின் மணத்தையும் இயல்பாக திரையில் பதிவு செய்து தமிழ் சினிமாவின் ட்ரெண்ட் செட்டராக மாற்றினார் பாரதிராஜா.. நடிகைகள் ராதிகா சரத்குமார், ராதா, ரேவதி, ரேகா, ரஞ்சித நடிகர் கார்த்தி உள்ளிட்ட பல திரைப்பிரபலங்களை அறிமுகம் செய்தவர்.. மேலும் ஜனகராஜ், வடிவுக்கரசி, சந்திரசேகர், பாண்டியன், நெப்போலியன் ஆகியோரயும் பாரதிராஜா தான் அறிமுகம் செய்தார்..
பாரதிராஜா தனது படங்களில் புதிய நடிகர்களுக்குச் சிறிய வேடங்களை அளித்து வந்தார்.. பின்னர் அவர்கள் மக்களிடையே பிரபலமடைந்து, தொடர்ந்து பல படங்களில் நடிக்கும் அளவுக்குத் திரைத்துறையில் பிஸியான நடிகர்களாக மாறினர். இன்று பிரபலமாகத் திகழும் பல இயக்குநர்கள், அவரது படங்களில் அறிமுக நிலையில் சிறிய வேடங்களில் நடித்ததன் மூலமே நடிகர்களாக உருவெடுத்தனர்..
கே. பாக்யராஜ், மணிவண்ணன், மனோபாலா, தியாகராஜன் மற்றும் பொன்வண்ணன் போன்ற நடிகர்களை இதற்கு உதாரணமாக சொல்லலாம்.. மேலும் சத்யராஜை முதன்முறையாக ஒரு திரைப்படத்தில் கதாநாயகனாக நடிக்க வைத்ததும் பாரதிராஜா தான்..
கிழக்கே போகும் ரயில், சிகப்பு ரோஜாக்கள், அலைகள் ஓய்வதில்லை, முதல் மரியாதை உள்ளிட்ட காலத்தால் அழியாத பல படைப்புகளை வழங்கி உள்ளார்.. 40-க்கும் மேற்பட்ட படங்களை இயக்கி தமிழ் ரசிகர்களின் மனதில் நீங்கா இடம் பிடித்துள்ளார்.. தமிழ் சினிமாவின் தவிர்க்க முடியாத இயக்குனர்களில் ஒருவராக விளங்கிய பாரதிராஜா தனது படங்களுக்காக 6 தேசிய விருதுகளை பெற்றுள்ளார்.
1982: சிறந்த தெலுங்கு திரைப்படத்திற்கான விருது – சீதகோக சிலகா (Seethakoka Chilaka)
1986: சிறந்த தமிழ் திரைப்படத்திற்கான விருது – முதல் மரியாதை
1988: சமூகப் பிரச்சினைகளுக்கான சிறந்த திரைப்பட விருது – வேதம் புதிது
1995: குடும்பநலன் சார்ந்த சிறந்த திரைப்பட விருது – கருத்தம்மா
1996: சிறந்த பிராந்திய மொழி திரைப்பட விருது – அந்திமந்தாரை
2001: சிறந்த திரைக்கதைக்கான விருது – கடல் பூக்கள்
தமிழக அரசின் கலைமாமணி விருது மற்றும் பல மாநில அரசின் விருதுகளையும் பாரதிராஜா வென்றுள்ளார்.. திரைத்துறைக்கு அவர் ஆற்றிய சிறப்பான பங்களிப்பிற்காக இந்திய அரசு அவருக்கு 2004-ஆம் ஆண்டில் பத்மஸ்ரீ விருதும், சத்யபாமா பல்கலைக்கழகம் சார்பில் 2005-ஆம் ஆண்டு கௌரவ டாக்டர் பட்டமும் வழங்கப்பட்டது..
இயக்குனராக மட்டுமின்றி நடிகராகவும் ரசிகர்களின் மனதை வென்றார் பாரதிராஜா.. ஆயுத எழுத்து, திருச்சிற்றம்பலம், ஈஸ்வரன், நம்ம வீட்டு பிள்ளை, பாண்டிய நாடு, திருச்சிற்றம்பலம் உள்ளிட்ட பல திரைப்படங்களில் நடித்தார்..
பாரதிராஜா என்றாலே நம் நினைவுக்கு வருவது “ என் இனிய தமிழ் மக்களே, நான் உங்கள் பாசத்திற்குரிய பாரதிராஜா பேசுகிறேன்..” என்ற வசனம் தான். பாரதிராஜா மறைந்தாலும் அவரின் ஆகச்சிறந்த படைப்புகள் மூலம் என்றும் நிலைத்திருப்பார் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை..



