ஜார்கண்ட் மாநிலத்தின் கிரிடிஹ் மாவட்டத்தில் பானி பூரி சாப்பிட்ட 7 வயது குழந்தை உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும் 18 பேர் உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இந்த சம்பவம் கிரிடிஹ் மாவட்டத்தின் லேடா பஜ்டோ கிராமத்தில் ஞாயிற்றுக்கிழமை நடந்துள்ளது. காவல்துறை அளித்த தகவலின்படி, மாலை பொழுது கிராமத்திற்கு வந்த தள்ளுவண்டி வியாபாரி ஒருவர் பானி பூரி மற்றும் சாட் உணவுகளை விற்பனை செய்துள்ளார். பலர் அந்த உணவுகளை வாங்கி சாப்பிட்டுள்ளனர். ஆனால் நள்ளிரவு முதல் பலருக்கும் வாந்தி, வயிற்றுப்போக்கு உள்ளிட்ட அறிகுறிகள் தோன்றத் தொடங்கின.
இதையடுத்து பெண்கள் மற்றும் குழந்தைகள் உட்பட 20க்கும் மேற்பட்டோர் அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வரும் நிலையில், 7 வயது குழந்தை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். மற்றவர்களின் உடல்நிலை தற்போது சீராக உள்ளதாக மருத்துவமனை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சம்பவம் குறித்து காவல்துறை தீவிர விசாரணையைத் தொடங்கியுள்ளது. பானிபூரி விற்பனை செய்த தள்ளுவண்டி வியாபாரி தற்போது தலைமறைவாக உள்ளார். அவரை கைது செய்ய சிறப்பு குழுக்கள் அமைக்கப்பட்டு தேடுதல் வேட்டை நடைபெற்று வருகிறது. பொதுமக்கள் தெருவோர உணவுகளை வாங்கும் போது அதிக கவனம் செலுத்த வேண்டும் என அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.



