கர்நாடகாவில்(KARNATAKA) குரங்கு காய்ச்சலால் 57 வயது பெண் ஒருவர் பலியானார். அம்மாநிலத்தில் கடந்த ஜனவரி முதல் இந்த நோயால் இறந்தவர்களின் எண்ணிக்கை தற்போது நான்காக உயர்ந்துள்ளது. குரங்குகளில் இருக்கும் உண்ணிகள் கடிப்பதால் இந்த நோய் பரவுவதாக கண்டறியப்பட்டுள்ளது. வனப்பகுதி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் வசிப்பவர்களுக்கு இந்த நோய் பார்க்க கூடிய அபாயம் உள்ளதால் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்று அம்மாநில சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.
கடந்த ஞாயிற்றுக்கிழமை, கர்நாடக மாநிலத்தில் உள்ள ஷிவமொக்கா மாவட்டத்தில், 57 வயது பெண் ஒருவர் KFD என்று அழைக்கப்படும் குரங்கு காய்ச்சலால் உயிரிழந்தார். 20 நாட்களாக அந்தப் பெண் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு வென்டிலேட்டர் உதவியுடன் இருந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த வைரசால் கடந்த ஜனவரி முதல் அந்த மாநிலத்தில் நடந்த இறப்பு எண்ணிக்கை நான்காக உயர்ந்துள்ளது.
சுகாதாரத்துறை தெரிவித்த தரவுகளின் படி, கடந்த ஜனவரி 1 முதல் பிப்ரவரி 25 வரை 4641 நபர்கள் இந்த கிருமிக்கான பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டனர். அதில் 120 பேருக்கு நோய் தொற்று இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. 95 பேர் குணமடைந்து மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பிய நிலையில், 22 நபர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. 18 வயது சிறுமி உட்பட, இந்த வைரஸால் கடந்த ஜனவரி முதல் 4 மரணம் ஏற்பட்டு விட்டது என்று சுகாதாரத்துறை அதிகாரி தெரிவித்தார்.
இந்த மாத தொடக்கத்தில், சுகாதார அமைச்சர் தினேஷ் குண்டு ராவ், நோய்த் தொற்று உள்ளதாக அறிவிக்கப்பட்ட மாவட்டங்களின் சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் அதிகாரிகளுடன் உயர்மட்டக் கூட்டத்தை நடத்தினார். மாநில அரசு, இந்த வைரஸை தடுக்கக்கூடிய தடுப்பூசியை கண்டுபிடிக்க இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலுடன் (ICMR) பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
KFD என்று அழைக்கப்படும் குரங்கு காய்ச்சல், குரங்குகளில் வாழும் உண்ணிகள் கடிப்பதால் பரவுகிறது. அந்த உண்ணிகள் கடித்த கால்நடைகளுடன் தொடர்பு கொண்டாலும் மனிதர்களுக்கு இது பரவுகிறது என்று கூறப்படுகிறது.
வனப்பகுதி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதியில் வசிக்கும் மக்களுக்கு இந்த நோய் தொற்று வரக்கூடிய அபாயம் இருப்பதால் அவர்கள் மிகுந்த எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மேலும் மக்கள் மேற்கொள்ள வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை குறித்து, அதிகாரிகள் வீடு வீடாக சென்று விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறார்கள்.