பெங்களூருவில் வாடகைக்கு வீடு தேடுவது என்பது பலருக்கும் கடுமையான அனுபவமாக மாறி வருகிறது. தற்போது ஒரு மென்பொருள் பொறியாளர் பகிர்ந்த அனுபவம் சமூக வலைதளங்களில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. கோஜெக் நிறுவனத்தில் பணிபுரியும் அவர், கிரேப்வைன் தளத்தில் தனது அனுபவத்தை பதிவிட்டுள்ளார்.
அவர் கூறுகையில், பெங்களூருவில் ஒரு 1BHK வீட்டை வாடகைக்கு எடுக்க முயன்றபோது, வீட்டு உரிமையாளர் பல்வேறு தனிப்பட்ட விவரங்களை கேட்டதாக தெரிவித்துள்ளார். அதில், அவரது மேலாளரின் தொலைபேசி எண், கடந்த ஆறு மாதங்களுக்கான வங்கி கணக்கு அறிக்கைகள், மேலும் மனிதவள (HR) துறையிலிருந்து நன்னடத்தைச் சான்றிதழ் போன்றவை அடங்கும்.
மேலும் அந்த வீடு சுவரில் ஈரப்பதம் மற்றும் கசிவு பிரச்சனை உள்ள நிலையில் இருந்ததாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இதை பகிர்ந்த அவர், “நான் வீடு எடுக்க வந்தேன், குழந்தை தத்தெடுக்க அல்ல” என்று தனது அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளார். இந்த பதிவு வைரலானதை தொடர்ந்து, பலரும் தங்களது அனுபவங்களை பகிர்ந்துள்ளனர். சிலர், வாடகைதாரர்கள் வீட்டை காலி செய்ய மறுப்பது போன்ற பிரச்சனைகள் காரணமாக வீட்டு உரிமையாளர்கள் இவ்வாறு கடுமையான சரிபார்ப்புகளை மேற்கொள்கிறார்கள் எனக் கூறினர்.
மற்றொரு தரப்பு, இது தேவையற்ற தனியுரிமை மீறல் என்றும், சாதாரண வாடகை ஒப்பந்தத்திற்கு இத்தகைய ஆவணங்கள் அவசியமில்லை என்றும் கருத்து தெரிவித்தனர். மேலும் சிலர், கடந்த கால மோசடி அனுபவங்களே இத்தகைய சந்தேகங்களுக்கு காரணமாக இருக்கலாம் எனவும் தெரிவித்துள்ளனர்.
இதேவேளை, சில பயனர்கள் அந்த பொறியாளரை அங்கிருந்து வெளியேறிவிடுமாறு அறிவுறுத்தியுள்ளனர். “இவ்வளவு கட்டுப்பாடுகள் இருந்தால் அங்கு வசிப்பது கடினம்” என்றும் அவர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். பெங்களூருவின் வாடகை வீட்டு சந்தையில் நிலவும் இந்த நிலை தற்போது பெரும் விவாதப் பொருளாக மாறியுள்ளது.
Read more: தூங்கும்போது உங்கள் மூளை என்ன செய்கிறது தெரியுமா..? கனவுகளுக்குப் பின்னால் இருக்கும் உண்மை இதுதான்!



