சுற்றுலா விசாக்களில் இந்தியா வந்திருந்த மூன்று அமெரிக்க நாட்டினர்கள், விதிமுறைகளை மீறி மதப் பிரச்சார நடவடிக்கைகளில் ஈடுபட்டதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதனைத் தொடர்ந்து, புனே காவல்துறை அவர்களுக்கு நாட்டை விட்டு வெளியேறுமாறு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
காவல்துறை அதிகாரிகள் தெரிவித்த தகவலின்படி, 53, 65 மற்றும் 66 வயதுடைய அந்த மூன்று அமெரிக்கர்கள் ஏப்ரல் 19 முதல் 21 ஆம் தேதிக்குள் இந்தியா வந்துள்ளனர். இவர்கள் சுற்றுலா விசா விதிமுறைகளை மீறி, மத துண்டுப் பிரசுரங்களை விநியோகித்ததுடன், கிறிஸ்தவ போதனைகளை பரப்பும் வகையில் உள்ளூர் மக்களுடன் உரையாடியதாக கூறப்படுகிறது.
ஏப்ரல் 27 அன்று புனே சுக்ரவார் பேட்டை பகுதியில் இந்தச் சம்பவம் வெளிச்சத்திற்கு வந்தது. அப்போது அவர்கள் ஒரு வாடகைக் கார் ஓட்டுநருக்கு ஆங்கிலம், இந்தி மற்றும் மராத்தி மொழிகளில் அச்சிடப்பட்ட துண்டுப் பிரசுரங்களை வழங்கியதாகவும், தங்களது மத நம்பிக்கைகளை விளக்க முயன்றதாகவும் கூறப்படுகிறது.
இதைக் கவனித்த ஓட்டுநர், உடனடியாக காவல்துறையினருக்கு தகவல் அளித்துள்ளார். பின்னர், மூவரும் காவல் நிலையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டு விசாரணை நடத்தப்பட்டது. அப்போது அவர்களிடம் இருந்து மதம் தொடர்பான அச்சிடப்பட்ட துண்டுப் பிரசுரங்கள் அதிக அளவில் பறிமுதல் செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பின்னர் வெளிநாட்டினர் பதிவு அலுவலகம் மேற்கொண்ட விசாரணையில், அவர்கள் சுற்றுலா விசா விதிமுறைகளை மீறியிருப்பது உறுதி செய்யப்பட்டதாக காவல்துறை தெரிவித்துள்ளது. இதனைத் தொடர்ந்து, இந்திய குடிவரவு சட்டங்களின் அடிப்படையில், மே 10, 2026க்குள் இந்தியாவை விட்டு வெளியேறுமாறு நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து புனே காவல்துறை துணை ஆணையர் சந்தீப் பாஜிபாகரே கூறுகையில், “சுற்றுலா விசா விதிகளை மீறி மதப் பிரச்சாரத்தில் ஈடுபட்டதாலேயே நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அவர்கள் மீது இந்தியாவில் எந்தவித வழக்கும் பதிவு செய்யப்படவில்லை. இந்த விவகாரம் குறித்து மேலும் விசாரணை நடைபெற்று வருகிறது” என்று தெரிவித்துள்ளார்.



