நாடு முழுவதும் சுங்கச்சாவடிகளில் கட்டண வசூலை மேலும் முறைப்படுத்தும் நோக்கில், இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம் NHAI புதிய முக்கிய அறிவுறுத்தலை வெளியிட்டுள்ளது. வாகன உரிமையாளர்கள் தங்கள் FASTag-ஐ முன்பக்கக் கண்ணாடியில் சரியாக ஒட்டியிருக்க வேண்டும் என்றும், அதை மீறினால் கறுப்புப் பட்டியலில் சேர்க்கப்படலாம் என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது.
ரேடியோ அதிர்வெண் அடையாள (RFID) தொழில்நுட்பத்தில் இயங்கும் FASTag, சுங்கச்சாவடிகளில் வாகனங்கள் நிற்காமல் தானாகவே கட்டணத்தை பிடித்தம் செய்யும் வசதியாக செயல்படுகிறது. இதற்காகவே, ஸ்கேனர்கள் சரியாக வாசிக்க முன்பக்கக் கண்ணாடியில் டேக் ஒட்டப்பட வேண்டும் என விதிமுறை உள்ளது.
ஆனால் சில வாகன ஓட்டிகள் இந்த விதியை பின்பற்றாமல், FASTag-ஐ கையில் வைத்துக்கொண்டு சுங்கச்சாவடிகளை கடக்க முயல்வதாக அதிகாரிகள் கண்டறிந்துள்ளனர். இதனால் ஸ்கேனிங் சிக்கல்கள், நீண்ட வரிசைகள் மற்றும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இதனைத் தொடர்ந்து, விதிமுறையை கடுமையாக அமல்படுத்த NHAI நடவடிக்கை எடுத்துள்ளது. விதியை மீறினால் FASTag கறுப்புப் பட்டியலில் சேர்க்கப்படலாம் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
FASTag சரியான முறையில் பொருத்துவது ஏன் அவசியம்? சுங்கச்சாவடிகளில் தடையற்ற பயணத்தையும், டிஜிட்டல் கட்டண வசூல் முறையின் திறமையையும் உறுதி செய்யும் முக்கிய அமைப்பாக FASTag செயல்பட்டு வருகிறது. இதை சரியான முறையில் பயன்படுத்துவது பயண சீரமைப்புக்கு மிக முக்கியம் என NHAI தெரிவித்துள்ளது.
வாகனத்தின் முன்பக்கக் கண்ணாடியில் FASTag சரியாக பொருத்தப்பட்டால், சுங்கச்சாவடிகளில் உள்ள சென்சார்கள் அதை எளிதாக வாசிக்க முடியும். இதனால் வாகனங்கள் நிற்காமல் நேரடியாக கடந்து செல்ல முடியும். இது போக்குவரத்து நெரிசலை குறைத்து, நேரத்தை சேமிக்க உதவுகிறது. ஆனால் FASTag-ஐ கையில் வைத்துக் கொண்டு பயன்படுத்தும்போது ஸ்கேனிங் சீரற்றதாகி, வாகனங்கள் நிற்க வேண்டிய நிலை உருவாகிறது. இதுவே நீண்ட வரிசைகள் மற்றும் போக்குவரத்து நெரிசலுக்கு காரணமாகிறது.
தவறான பயன்பாட்டை தடுக்கும் பாதுகாப்பு: சரியான முறையில் FASTag பொருத்தப்படுவது தவறான பயன்பாட்டை கட்டுப்படுத்தவும் உதவுகிறது. ஒவ்வொரு FASTag-மும் ஒரு குறிப்பிட்ட வாகனத்துடன் இணைக்கப்பட்டிருப்பதால், அதை மாற்றிப் பயன்படுத்த முடியாது. இதன்மூலம் மோசடி பயன்பாடுகள் குறைகிறது. பல வாகனங்களில் ஒரே FASTag பயன்படுத்தும் வாய்ப்பு தடுக்கப்படுகிறது. சுங்கக் கட்டண வசூல் அமைப்பின் நம்பகத்தன்மை வலுப்பெறுகிறது.
FASTag மோசடிகள் அதிகரிப்பு: சுங்கச்சாவடிகளில் பயன்படுத்தப்படும் FASTag தொடர்பான மோசடிகள் அதிகரித்து வருவதாக, இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம் NHAI வாகன ஓட்டிகளுக்கு முக்கிய எச்சரிக்கை விடுத்துள்ளது.
அதன்படி, “FASTag ஆண்டு அனுமதிச் சீட்டு” போன்ற சேவைகள் வழங்கப்படுவதாக கூறி, அதிகாரப்பூர்வ இணையதளங்களைப் போலவே தோற்றமளிக்கும் போலி தளங்கள் உருவாக்கப்பட்டு, பயனாளர்களை ஏமாற்ற முயற்சிகள் நடைபெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மோசடிக்காரர்கள், அரசு இணையதளங்களைப் போலவே வடிவமைக்கப்பட்ட தளங்களை உருவாக்கி, வாகன ஓட்டிகளிடமிருந்து பணம் மற்றும் தனிப்பட்ட தகவல்களை திரட்ட முயல்கின்றனர். குறிப்பாக, குறைந்த கட்டணத்தில் FASTag சேவைகள் வழங்குவதாக கூறி ஏமாற்றுகின்றனர்.
பாதுகாப்பாக இருக்க என்ன செய்ய வேண்டும்? இதுபோன்ற மோசடிகளில் சிக்காமல் இருக்க, NHAI பின்வரும் வழிமுறைகளை கடைப்பிடிக்குமாறு அறிவுறுத்தியுள்ளது:
* அதிகாரப்பூர்வ அரசு செயலிகள் வழியாக மட்டுமே FASTag சேவைகளை பயன்படுத்தவும்.
* அறிமுகமில்லாத அல்லது விளம்பர இணைப்புகளை கிளிக் செய்வதை தவிர்க்கவும்.
* எந்த இணையதளத்திலும் விவரங்கள் அளிப்பதற்கு முன் URL சரிபார்க்கவும்.
* OTP, டெபிட்/கிரெடிட் கார்டு விவரங்கள், login தகவல்கள் போன்றவற்றை யாருடனும் பகிர வேண்டாம்.
* சந்தேகத்திற்குரிய இணையதளங்களில் உடனடியாக வெளியேறவும்.
* இணையத்தில் விழிப்புணர்வுடன் இருப்பது மிகவும் அவசியம் என்றும், அதிகாரப்பூர்வ வழிமுறைகளை மட்டுமே பின்பற்ற வேண்டும் என்றும் NHAI வலியுறுத்தியுள்ளது.
Read more: மனைவியுடன் தகராறு.. மாமியார் டார்ச்சர்.. 30 வயது நீதிபதி தூக்கிட்டு தற்கொலை..! என்ன நடந்தது..?



