மொத்தம் 234 தொகுதிகள் கொண்ட தமிழக சட்டசபையில், தனித்து ஆட்சி அமைக்க 118 இடங்கள் தேவை. ஆனால் தற்போதைய தேர்தல் முடிவில் தவெக 107 இடங்களில் வெற்றி பெற்று தனிப்பெரும் கட்சியாக மாறியிருந்தாலும், இன்னும் 11 எம்எல்ஏக்களின் ஆதரவு அவசியமாகியுள்ளது.
இந்த சூழலில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி முதலில் ஆதரவு அளிக்க முன்வரும் கட்சியாக உருவெடுக்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது. இதற்காக அந்தக் கட்சி செயற்குழு கூட்டம் நடத்த திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. தேர்தலில் 2 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ள CPI(M), விஜய் முதல்வராக ஆட்சி அமைப்பதற்கு ஆதரவு வழங்குமா என்பது இந்த கூட்டத்தின் முக்கிய அம்சமாக இருக்கும் என கூறப்படுகிறது.
அதேநேரத்தில், திமுக மற்றும் பாரதிய ஜனதா கட்சி ஆகியவை கொள்கை மற்றும் அரசியல் காரணங்களால் நேரடி ஆதரவுக்கு வர வாய்ப்பு குறைவு என மதிப்பிடப்படுகிறது. அதிமுக உடன் பேச்சுவார்த்தை நடத்துவது சாத்தியமாய் இருந்தாலும், தேர்தலில் ஏற்பட்ட போட்டி காரணமாக அது எளிதாக அமையாது என அரசியல் வட்டாரங்கள் கூறுகின்றன.
இதனால், கூட்டணிக் கட்சிகள் மீது தான் தவெக கண்கள் திரும்பியுள்ளன. குறிப்பாக காங்கிரஸ் (5), இந்திய கம்யூனிஸ்ட், விசிக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் (தலா 2), தேமுதிக (1) போன்ற கட்சிகளிடமும், மறுபக்கம் பாமக (5), அமமுக (1) போன்ற கட்சிகளிடமும் ஆதரவு கேட்க வாய்ப்பு உள்ளது. இதற்கிடையில், கீழ்வேளூர் தொகுதியில் CPI(M) வேட்பாளர் லதா மற்றும் பத்மநாபபுரம் தொகுதியில் செல்லசாமி வெற்றி பெற்றுள்ளார்கள்.
இவர்கள் தவெகவிற்கு ஆதரவு அளித்தால், 118 என்ற எண்ணிக்கையை அடைய இன்னும் 9 எம்எல்ஏக்கள் ஆதரவு மட்டுமே தேவைப்படும் நிலை உருவாகும். மொத்தத்தில், தமிழக அரசியலில் அடுத்த சில நாட்கள் மிக முக்கியமானதாக மாறியுள்ளன. யார் ஆதரவு அளிக்கிறார்கள்? விஜய் முதல்வராகப் பதவியேற்கிறாரா? என்ற கேள்விகள் தற்போது அரசியல் அரங்கின் மையமாக மாறியுள்ளன.
Read more: எம்.ஜி.ஆர் சாதனையை முறியடித்த விஜய்.. 34.8% வாக்குகள் பெற்று சரித்திரம் படைத்த தவெக..!



