தமிழகத்தில் இன்று காலை 9.30 மணிக்கு பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளியானது.. அதன்படி தமிழ்நாட்டில் பிளஸ் 2 தேர்வில் 95.20% பேர் தேர்ச்சி பெற்றுள்ளதாக பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது. அதன்படி பிளஸ் 2 தேர்வில், ஈரோடு மாவட்டம் முதலிடம் பிடித்துள்ளது.. சிவகங்கை மாவட்டம் 2-ம் இடம் பிடித்துள்ளது, கன்னியாகுமரி 3-ம் இடம் பிடித்துள்ளது..
தமிழ்நாடு செய்திகள்
பிளஸ் 2 தேர்வில் மாணவர்கள் 93.19%, மாணவிகள் 97% பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.. இந்த முறையும் +2 தேர்வில் மாணவர்களை விட 3.81% மாணவிகள் அதிகம் தேர்ச்சி பெற்றுள்ளனர்.. கடந்த ஆண்டு தேர்ச்சி சதவீதம் 95.03% ஆக இருந்த நிலையில், இந்த ஆண்டு தேர்ச்சி விகிதம் 0.17% உயர்ந்துள்ளது..
அரசுப் பள்ளிகள் 92.16%, அரசு உதவி பெறும் பள்ளிகள் 98.72% தேர்ச்சி விகிதம் பதிவாகி உள்ளது.. பிளஸ் 2 தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு மே 13 முதல் தற்காலிக மதிப்பெண் பட்டியல் வழங்கப்படும்..
இந்த நிலையில் தமிழ்நாடு ஆளுநர் அர்லேகர் உத்தரவின் பேரில் தான் பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டன என்று மக்கள் மாளிகை பதிவிட்டுள்ளது. மாணவர்களின் நலன் கருதி உரிய நேரத்தில் தேர்வு வெளியாக வேண்டுமென ஆளுநர் அறிவுறுத்தினார்.. புதிய கல்வி அமைச்சர் பொறுப்பேற்கும் வரை தேர்வு முடிவு ஒத்திவைக்கப்படலாம் என்ற சூழலில் ஆளுநர் முடிவு செய்துள்ளதாக ஆளுநர் மாளிகை தெரிவித்துள்ளது..
தமிழ்நாட்டில் ஆட்சி அமைக்க யாருக்கும் பெரும்பான்மை கிடைக்காத நிலையில் ஆட்சி அமைப்பதில் இழுபறி நீடிக்கிறது.. தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலில் முதன்முறையாக களமிறங்கிய தமிழக வெற்றிக் கழகம் 108 இடங்களில் வெற்றி பெற்று தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ளது.. திமுக கூட்டணி 73 இடங்களிலும், அதிமுக கூட்டணி 53 இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளன..
தவெகவுக்கு காங்கிரஸ் ஆதரவு வழங்கி உள்ள நிலையில், அக்கட்சிக்கு மேலும் 5 இடங்கள் தேவைப்படுகிறது.. விசிக, இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்கள் தனித்தனியே கடிதமும் அனுப்பி வைக்கப்பட்டது.. தவெகவின் நிர்வாகிகள் நேரடியாகவும் சென்று ஆதரவு கோரினர்.. இதுகுறித்து விசிக, கம்யூனிஸ்ட் கட்சிகள் இன்று ஆலோசனை நடத்தி வருகின்றன.. எனினும் எந்த முடிவு ஏற்படாமல் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது..



