தெலுங்கானா மாநிலம் செகந்திராபாத்தில் நேற்று நடைபெற்ற நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடி உரையாற்றிய போது, உலகளாவிய பொருளாதார நிச்சயமற்ற சூழல் மற்றும் எரிபொருள் நெருக்கடி குறித்து முக்கியமான அறிவுறுத்தல்களை வழங்கினார். தேசிய நலனை கருத்தில் கொண்டு பெட்ரோல், டீசல் பயன்பாட்டை குறைக்க வேண்டியது அவசியம் என அவர் வலியுறுத்தினார்.
உலகளவில் கச்சா எண்ணெய் விநியோகம் பாதிக்கப்பட்டுள்ள சூழல், மேற்காசிய போர் பதற்றம் உள்ளிட்ட காரணங்களால் எரிபொருள் விலை மற்றும் வழங்கல் நிலைமை அதிக அழுத்தத்தில் இருப்பதாக பிரதமர் மோடி குறிப்பிட்டார். இதனை சமாளிக்க சிக்கனமான நடவடிக்கைகள் அவசியம் என்றும் அவர் தெரிவித்தார்.
WFH நடைமுறை மீண்டும் அவசியம்: பிரதமர் மோடி பேசுகையில், சாத்தியமான இடங்களில் மீண்டும் Work From Home (WFH) முறையை நடைமுறைப்படுத்த வேண்டும் என்று நிறுவனங்களையும் பொதுமக்களையும் கேட்டுக்கொண்டார். இதன் மூலம் தேவையற்ற பயணங்கள் குறையும், எரிபொருள் பயன்பாடு குறையும், அதேசமயம் பொருளாதார அழுத்தமும் குறையும் என அவர் தெரிவித்தார்.
கொரோனா காலத்தில் வீட்டிலிருந்து வேலை செய்வது, ஆன்லைன் கூட்டங்கள், வீடியோ கான்பரன்ஸ் போன்ற நடைமுறைகள் பரவலாக பயன்படுத்தப்பட்டதை நினைவுகூர்ந்த அவர், அந்த அனுபவத்தை மீண்டும் பயன்படுத்த வேண்டிய காலம் இது என்றும் கூறினார்.
ஆன்லைன் கூட்டங்கள் மற்றும் டிஜிட்டல் தளங்களை அதிகம் பயன்படுத்துவதன் மூலம் உற்பத்தித்திறனை பாதிக்காமல் வைத்துக்கொள்ள முடியும் எனவும், அதே நேரத்தில் எரிபொருள் தேவையையும் குறைக்க முடியும் எனவும் பிரதமர் மோடி கூறினார். இது தேசிய நலனுக்கான ஒரு முக்கிய நடவடிக்கை எனவும் அவர் வலியுறுத்தினார்.
பெட்ரோல் மற்றும் டீசல் இறக்குமதிக்கு அதிக அளவில் அந்நியச் செலாவணி செலவாகிறது என்பதை சுட்டிக்காட்டிய பிரதமர், அதனை குறைப்பது அனைவரின் பொறுப்பு என தெரிவித்தார். எரிபொருள் பயன்பாட்டை கட்டுப்படுத்துவது நாட்டின் பொருளாதார நிலைத்தன்மைக்கு உதவும் என்றும் அவர் கூறினார். மேலும் சமையல் எண்ணெய் மற்றும் உரங்களின் பயன்பாட்டையும் குறைத்தால், அது நாட்டின் பொருளாதார வலிமையை உயர்த்தும் எனவும், ஒவ்வொரு குடும்பமும் இதில் பங்களிக்க வேண்டும் எனவும் பிரதமர் மோடி கேட்டுக்கொண்டார்.



