திருப்பாடகம் பாண்டவதூத பெருமாள் கோயில், திருமாலின் 108 திவ்யதேசங்களில் 48-வது தலமாக போற்றப்படும் சிறப்புமிக்க வைணவ ஸ்தலமாகும். காஞ்சிபுரம் மாவட்டத்தில் அமைந்துள்ள இந்தப் பழமையான கோயில், மகாபாரதத்தில் பாண்டவர்களின் தூதராக சென்ற கிருஷ்ண பகவான் விஸ்வரூபம் எடுத்த தருணத்தை நினைவூட்டும் தலமாக பக்தர்களால் வணங்கப்படுகிறது.
இந்த ஆலயத்தின் முக்கிய சிறப்பு, 25 அடி உயரத்தில் அமர்ந்த நிலையில் விஸ்வரூப காட்சி தரும் கிருஷ்ணர் மூலவராக அருள்பாலிப்பதுதான். “பாண்டவதூத பெருமாள்” என்ற திருநாமத்துடன் அருள்புரியும் இவர், வழக்கமான நான்கு கரங்களுடன் அல்லாமல், இரண்டு திருக்கரங்களுடன் மட்டுமே காட்சி தருவது குறிப்பிடத்தக்கது. வலது காலை மடக்கி அர்த்த பத்மாசன நிலையில் அமர்ந்துள்ள கிருஷ்ணர், வலது கரத்தில் அபய முத்திரையும், இடது கரத்தில் வரத முத்திரையும் காட்டி பக்தர்களுக்கு அருள் பாலிக்கிறார்.
கிருஷ்ணர் அமர்ந்த நிலையில் காட்சி தருவது இந்தத் தலத்தின் அபூர்வ தனிச்சிறப்பாக கருதப்படுகிறது. நான்கு நிலை ராஜகோபுரங்களைக் கொண்ட இந்தக் கோயில், முதலில் பல்லவர்களால் கட்டப்பட்டதாகக் கூறப்படுகிறது. பின்னர் குலோத்துங்க சோழன் மற்றும் ராஜராஜ சோழன் ஆட்சிக்காலங்களில் கோயில் விரிவுபடுத்தப்பட்டதாக கல்வெட்டுகள் தெரிவிக்கின்றன. விஜயநகர மன்னர்களாலும் இத்தலம் புனரமைக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
கோயிலின் அர்த்த மண்டபத்தில் ஆழ்வார்கள், உற்சவர், ராமானுஜர் உள்ளிட்டோரின் சன்னதிகளும் அமைந்துள்ளன. மூலவரின் தெற்கு புறத்தில் ருக்மணிக்கு தனிச் சன்னதி அமைந்துள்ளது. மேலும், சக்கரத்தாழ்வாரின் பின்புறத்தில் நரசிம்மர் உருவம் காணப்படுவது பக்தர்களை ஆச்சரியப்படுத்துகிறது.
கோயிலின் வடகிழக்கு பகுதியில் அமைந்துள்ள “மத்ஸ்ய தீர்த்தம்” பக்தர்களால் புனித தீர்த்தமாக கருதப்படுகிறது. பூதத்தாழ்வார், பேயாழ்வார், திருமழிசையாழ்வார் மற்றும் திருமங்கையாழ்வார் ஆகிய ஆழ்வார்கள் இந்தத் தல இறைவனை மங்களாசாசனம் செய்துள்ளனர் என்பது இத்தலத்தின் ஆன்மிக மகத்துவத்தை வெளிப்படுத்துகிறது.
Read more: “இக்கட்டான சூழலில் கை கொடுத்தீர்கள்..” காதர் மொய்தீனை நேரில் சந்தித்து நன்றி தெரிவித்த CM விஜய்..!



