வாரத்திற்கு நான்கு நாட்கள் வேலை… தொடர்ந்து மூன்று நாட்கள் முழுமையான ஓய்வு என்றால் எவ்வளவு நன்றாக இருக்கும்..? உலகம் முழுவதும் உள்ள பெருநிறுவனத் துறையில் (corporate sector) ஏற்பட்டு வரும் பெரும் மாற்றங்களின் தொடர்ச்சியாக, இந்தக் கனவு விரைவில் நம் நாட்டிலும் நனவாகப் போகிறது.
கடந்த வார இறுதியில் மத்திய அரசால் அறிவிக்கப்பட்ட புதிய தொழிலாளர் சட்டம் (ஊதியக் குறியீடு – மத்திய விதிகள்), தொழிலாளர்களுக்கும் மென்பொருள் துறை ஊழியர்களுக்கும் ஒரு புதிய நடைமுறையைக் கொண்டு வந்துள்ளது. தினசரி ஊதியத்திற்குப் பதிலாக மாத ஊதியம் பெறும் ஊழியர்களுக்கு, வாரத்திற்கு அதிகபட்சமாக 48 மணி நேரத்திற்கு மேல் வேலை நேரம் இருக்கக்கூடாது என்பதை இந்த புதிய விதிகள் தெளிவாக எடுத்துரைக்கின்றன.
இதன் பொருள் என்னவென்றால், நிறுவனங்கள் விரும்பினால், எந்தவிதத் தடங்கலும் இன்றி தங்கள் ஊழியர்களுக்கு ‘நான்கு நாள் வேலை வாரம்’ என்ற முறையை அமல்படுத்தலாம். மீதமுள்ள மூன்று நாட்களும் ஊதியத்துடன் கூடிய விடுமுறை நாட்களாக வழங்கப்பட வேண்டும். இந்த மத்திய தொழிலாளர் விதிமுறைகள், நாடு முழுவதும் ஒன்றுக்கும் மேற்பட்ட மாநிலங்களில் அலுவலகங்களைக் கொண்டுள்ள அனைத்து நிறுவனங்களுக்கும் நேரடியாகப் பொருந்தும்.
இருப்பினும், இந்த கொள்கையை கண்மூடித்தனமாக அமல்படுத்திவிட முடியாது என்று சட்ட வல்லுநர்கள் சில முக்கியக் கருத்துகளைத் தெரிவித்துள்ளனர். இந்த புதிய விதிகள் குறித்துப் பேசிய JSA Advocates and Solicitors நிறுவனத்தின் கூட்டாளர் (Partner) சஜாய் சிங், பல சுவாரஸ்யமான கருத்துகளைப் பகிர்ந்துகொண்டார்.
புதிய தொழிலாளர் சட்டத்தின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ள இந்த நான்கு நாள் வேலைக் கொள்கையானது, வேலையளிப்பவர்களுக்கு (நிறுவனங்களுக்கு) முற்றிலும் ஒரு விருப்பத் தேர்வே தவிர, கட்டாயமல்ல என்பதை அவர் தெளிவுபடுத்தினார். ஒவ்வொரு நிறுவனமும் இதை கண்டிப்பாக அமல்படுத்த வேண்டும் என்ற எந்தக் கட்டாயமும் எங்கும் விதிக்கப்படவில்லை. நிறுவனங்களுக்குச் சற்று நெகிழ்வுத்தன்மையை வழங்கும் நோக்கிலேயே அரசாங்கம் இந்த விருப்பத் தேர்வை வழங்கியுள்ளது.
குறிப்பாக, நிறுவனங்கள் இந்த முடிவை ஊழியர்கள் மீது தன்னிச்சையாகத் திணிக்க முடியாது. வேலை நாட்கள் குறைக்கப்பட்டிருப்பதையும், அதற்கேற்ப வேலை நேரம் அதிகரிக்கப்பட்டிருப்பதையும் ஊழியர் முழு மனதுடன் ஏற்றுக்கொண்டால் மட்டுமே, அலுவலகங்களில் இந்தக் கொள்கையை அமல்படுத்த முடியும்.
இந்த ‘மூன்று நாள் வார இறுதி’க் கொள்கையை அமல்படுத்துவதற்கு, நிறுவனங்கள் சில கடுமையான நிபந்தனைகளைக் கண்டிப்பாகப் பின்பற்ற வேண்டும். வாரத்திற்கு நிர்ணயிக்கப்பட்ட 48 மணி நேர வேலை இலக்கை நிறைவு செய்ய, ஊழியர்கள் தினமும் சரியாக 12 மணி நேரம் பணியில் இருக்க வேண்டும். இந்த 12 மணி நேர நீண்ட பணி நேரத்தில், மாநில அளவிலான சட்டங்களின்படி அனுமதிக்கப்பட்டுள்ள இடைவேளைகள், தேநீர் இடைவேளைகள் மற்றும் உணவு நேரங்கள் ஆகியவையும் அடங்கும். நான்கு நாட்கள் வேலை செய்ததற்கு ஈடாக, வாரத்தின் கடைசி மூன்று நாட்களும் ஊதியத்துடன் கூடிய விடுமுறை நாட்களாக வழங்கப்படும்.
ஒருவேளை, ஏதேனும் ஒரு ஊழியர் ஒரு நாளைக்கு 12 மணி நேரத்திற்கு மேல் வேலை செய்தாலோ அல்லது வாரத்திற்கு நிர்ணயிக்கப்பட்ட அந்த நான்கு நாட்களுக்குப் பிறகும் அலுவலகத்தில் கூடுதல் நேரம் (Overtime) செலவிட்டாலோ… அந்த கூடுதல் நேரத்திற்கு, வழக்கமான ஊதிய விகிதத்தை விட இருமடங்கு ஊதியம் வழங்கப்பட வேண்டும். இந்தக் கடுமையான விதிமுறைகள் அனைத்தும் கறாராகப் பின்பற்றப்பட்டால் மட்டுமே, நிறுவனங்களால் இந்த புதிய வேலை வார முறையைத் தொடங்க முடியும்.
நீண்ட நேரம் குளிரூட்டப்பட்ட அறைகளில் அமர்ந்து வேலை செய்தாலும், மூளை சார்ந்த பணிகளை எளிதாகச் சரிசெய்துகொள்ள முடியும். ஆனால், இந்த புதிய தொழிலாளர் சட்ட விதி அனைத்துத் துறைகளுக்கும் பொருந்தாது என்றும், சிலருக்குக் கடுமையான பாதிப்பை ஏற்படுத்தும் என்றும் நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.
மருத்துவமனைகள், சுகாதாரம், விருந்தோம்பல், சில்லறை விற்பனை, போக்குவரத்து, தளவாடங்கள் மற்றும் உற்பத்தித் துறைகளில் செயல்படும் நிறுவனங்களுக்கு இந்தக் கொள்கையைச் செயல்படுத்துவது கிட்டத்தட்ட சாத்தியமற்றது.
“இந்தத் தொழில்களில் உள்ள பல நிறுவனங்கள், குறிப்பிட்ட வேலைச் சூழல்களுக்கு ஆளாகும் தொழிலாளர்களின் வேலை நேரத்தைக் கட்டுப்படுத்துகின்றன. இந்த நேரத்தை ஒரு நாளைக்கு 12 மணி நேரமாக மாற்ற முடியாது, ஏனெனில் அவ்வாறு செய்வது தொழிலாளியின் ஆரோக்கியத்தில் கடுமையான பாதிப்பை ஏற்படுத்தும்,” என்று சஜய் சிங் கூறினார். கனரக இயந்திரங்களில் 12 மணி நேரம் தொடர்ச்சியாகப் பணியாற்றுவதும், கடும் குளிரில் வேலை செய்வதும், அதிக உடல் உழைப்பு தேவைப்படும் பணிகளும் உயிருக்கு ஆபத்தை விளைவிக்கக்கூடும். அதனால்தான் இந்தத் துறைகளில் உள்ள தொழிலாளர்களுக்கு இந்தக் கொள்கையைச் செயல்படுத்துவது சாத்தியமில்லை என்று அவர் கூறி முடித்தார்.


