மூத்த தயாரிப்பாளரான கே.ராஜன் மறைவுக்கு முதல்வர் விஜய் இரங்கல் தெரிவித்துள்ளார்
தமிழ் திரையுலகில் நீண்ட கால அனுபவம் கொண்ட தயாரிப்பாளராகவும், பேச்சாளராகவும் அறியப்படுபவர் கே. ராஜன். 1983 ஆம் ஆண்டு வெளிவந்த பிரம்மச்சாரிகள் திரைப்படத்தின் மூலம் தயாரிப்பாளரக அறிமுகமானார். தயாரிப்பாளராக மட்டுமின்றி சில திரைப்படங்களையும் இயக்கியுள்ள்ளார். திரைப்பட தயாரிப்பு, விநியோகம் மற்றும் திரையுலக சங்க பணிகளில் ஈடுபட்டு, கோலிவுட் வட்டாரத்தில் தனித்த அடையாளம் பெற்றவர்.
சினிமா தயாரிப்பாளராக பல படங்களை உருவாக்கியுள்ள இவர், குறிப்பாக குறைந்த பட்ஜெட் திரைப்படங்களை ஆதரித்து தயாரிக்கும் பாணியால் அறியப்படுகிறார். தயாரிப்பு மட்டுமல்லாது, திரைப்பட விநியோகம் மற்றும் திரையரங்கு தொடர்பான விவகாரங்களிலும் இவர் தொடர்ந்து கருத்து தெரிவித்து வருகிறார். திரையுலக பிரச்சனைகள் குறித்து வெளிப்படையாக பேசும் சில தயாரிப்பாளர்களில் ஒருவராக இவர் பார்க்கப்படுகிறார்.
இந்த சூழலில் நேற்று தமிழ் திரைப்பட தயாரிப்பாளரான கே.ராஜன் அடையாறு ஆற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. தீயணைப்பு வீரர்கள் உடலை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தற்கொலைக்கான காரணம் இதுவரை வெளியாகவில்லை. சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த அடையாறு போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அவரின் மறைவுக்கு திரைப் பிரபலங்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்..
இந்த நிலையில் மூத்த தயாரிப்பாளரான கே.ராஜன் மறைவுக்கு முதல்வர் விஜய் இரங்கல் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் “ திரைப்பட துறையின் மூத்த தயாரிப்பாளரும், இயக்குநருமான கே.ராஜன் மறைவு வேதனையளிக்கிறது.. திரைப்படத்துறையின் நலன், தமிழ் சினிமாவின் போக்கு குறித்து துணிச்சலுடன் கருத்துகளை கூறுபவர்.. பல தசாப்தங்களாக திரைப்பட துறையுடன் நெருங்கி பயணித்த பங்களிப்புகள் நினைவுகூரத்தக்கவை..
கே.ராஜனின் பங்களிப்பை திரைத்துறை நினைவில் வைத்திருக்கும்.. அவரை இழந்துவாடும் அவரது குடும்பத்திற்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்..” என்று தெரிவித்துள்ளார்..



