இந்தியாவின் ஆன்மிக பூமியில், குறிப்பாக வட இந்தியாவில், பல மர்மங்களும் ஆச்சரியங்களும் நிறைந்த கோவில்கள் உள்ளன. அவற்றில் பக்தர்களை வியப்பில் ஆழ்த்தும் முக்கிய தலமாக கோபேஷ்வர் மகாதேவ் கோயில் திகழ்கிறது. விருந்தாவனம் நகரின் வம்சிவட் பகுதியில் அமைந்துள்ள இந்த ஆலயத்தில், சிவலிங்கத்திற்கு தினமும் புடவை அணிவித்து பெண் வடிவில் அலங்காரம் செய்து வழிபடும் தனித்துவமான மரபு பல நூற்றாண்டுகளாக தொடர்ந்து வருகிறது.
இந்த விசித்திரமான வழிபாட்டின் பின்னணியில் ஆழமான புராணக் கதை ஒன்று இருப்பதாக பக்தர்கள் நம்புகின்றனர். புராணங்களின்படி, ஒரு பௌர்ணமி இரவில் க்ரிஷ்ணா, யமுனை நதிக்கரையில் கோபியர்களுடன் இணைந்து “ராஸ லீலை” எனப்படும் தெய்வீக நடனத்தை ஆடியதாக கூறப்படுகிறது. பரமாத்மாவும் ஜீவாத்மாவும் ஒன்றிணையும் இந்த புனித நிகழ்வைக் காண வேண்டும் என்ற ஆசையில் சிவன் பிருந்தாவனத்திற்கு வந்ததாக கூறப்படுகிறது.
ஆனால், அந்த இடத்தில் காவலில் இருந்த பிருந்தா தேவி, “இந்த ராஸ லீலையில் கிருஷ்ணரைத் தவிர வேறு எந்த ஆணுக்கும் அனுமதி இல்லை” என்று கூறி சிவபெருமானை தடுத்ததாக புராணங்களில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதனால் மனம் உருகிய சிவன், அந்த தெய்வீக நடனத்தில் பங்கேற்க வேண்டி அங்கேயே தவமிருந்தார்.
சிவபெருமானின் பக்தியால் மகிழ்ந்த பிருந்தாதேவி, அவரை “குசும் சரோவர்” என்ற புனித தீர்த்தத்தில் நீராடுமாறு அறிவுறுத்தினார். அந்த தீர்த்தத்தில் மூழ்கி எழுந்தபோது, சிவன் ஒரு அழகிய கோபியர் வடிவத்தை பெற்றதாக நம்பப்படுகிறது. அதன்பிறகு, பெண் வடிவிலேயே ராஸ லீலையில் கலந்து கொண்டு கிருஷ்ணா உடன் நடனமாடினார். அந்த தருணத்தில் கிருஷ்ணர், சிவபெருமானை அன்புடன் “கோபேஷ்வர்” என்று அழைத்ததாக கூறப்படுகிறது. அதாவது “கோபியர்களின் ஈசன்” என்பதே அதன் பொருள்.
இந்த அபூர்வ நிகழ்வின் நினைவாகவே, கோபேஷ்வர் மகாதேவ் கோவிலில் இன்று வரை சிவலிங்கத்திற்கு புடவை அணிவித்து சிறப்பு அலங்காரம் செய்யப்படுகிறது. குறிப்பாக இரவு நேர அலங்காரத்தில், சிவலிங்கம் பெண் வடிவத்தை பிரதிபலிக்கும் வகையில் அலங்கரிக்கப்படுவது பக்தர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்துகிறது. மேலும், மற்ற சிவன் கோவில்களைப் போல இங்கு நைவேத்தியம் படைக்கப்படுவதில்லை என்பதும் இந்த ஆலயத்தின் மற்றொரு சிறப்பாகும்.



