இங்கிலாந்து கால்பந்து உலகின் மிகப்பெரிய தொடராக கருதப்படும் பிரீமியர் லீக்கில், 22 ஆண்டுகளுக்குப் பிறகு ஆர்சனல் அணி சாம்பியன் பட்டத்தை கைப்பற்றி வரலாற்றுச் சாதனை படைத்துள்ளது. போர்ன்மவுத் அணிக்கு எதிராக நடைபெற்ற முக்கிய போட்டியில் மான்செஸ்டர் சிட்டி அணி 1-1 என்ற கோல் கணக்கில் சமநிலையை சந்தித்ததன் மூலம், ஆர்சனல் அணியின் பட்ட வெற்றி அதிகாரப்பூர்வமாக உறுதி செய்யப்பட்டது.
கடந்த பல ஆண்டுகளாக பட்டத்தை வெல்ல போராடி வந்த ஆர்சனல் அணி, இந்த சீசனில் தொடக்கம் முதலே அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. பயிற்சியாளர் மைக்கேல் ஆர்டெட்டா தலைமையில் இளம் வீரர்கள் மற்றும் அனுபவமிக்க வீரர்கள் இணைந்து சிறப்பான அணிச் செயல்பாட்டை காட்டியதால், புள்ளிப்பட்டியலில் தொடர்ந்து முன்னிலை பெற்றிருந்தது.
இதற்கிடையில், தொடர்ந்து பல ஆண்டுகளாக பிரீமியர் லீக்கில் ஆதிக்கம் செலுத்தி வந்த மான்செஸ்டர் சிட்டி அணி, சீசனின் இறுதிக்கட்டத்தில் எதிர்பாராத வகையில் புள்ளிகளை இழந்தது. குறிப்பாக போர்ன்மவுத் அணிக்கு எதிரான போட்டியில் வெற்றியை தவறவிட்டதே, ஆர்சனலுக்கு பெரிய திருப்புமுனையாக அமைந்தது.
மான்செஸ்டர் சிட்டி அணியை விட ஒரு ஆட்டம் அதிகமாக விளையாடியிருந்தாலும், ஆர்சனல் அணி பெற்றிருந்த புள்ளி முன்னிலை அசைக்க முடியாத நிலையை எட்டியது. இதனால் 22 ஆண்டுகளாக நீடித்திருந்த ரசிகர்களின் காத்திருப்புக்கு முடிவு கிடைத்தது. ஆர்சனல் அணி கடைசியாக 2004ஆம் ஆண்டு லீக் பட்டத்தை வென்றிருந்தது குறிப்பிடத்தக்கது. அதன் பிறகு பலமுறை பட்டத்தை நெருங்கியிருந்தாலும், இறுதிக்கட்டத்தில் தவறவிட்டது. ஆனால் இந்த முறை முழு சீசனிலும் நிலையான ஆட்டத்தை வெளிப்படுத்தியதால், ரசிகர்களின் நம்பிக்கையை காப்பாற்றியுள்ளது.
பட்டம் உறுதியான தகவல் வெளியானதும், வடக்கு லண்டன் முழுவதும் ரசிகர்கள் தெருக்களில் திரண்டு கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். சமூக வலைதளங்களிலும் ஆர்சனல் ரசிகர்கள் மகிழ்ச்சியை பகிர்ந்து வருகின்றனர். இந்த சீசனின் இறுதி போட்டிக்குப் பிறகு, கிரிஸ்டல் பேலஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் ஆர்சனல் அணிக்கு கோப்பை முறைப்படி வழங்கப்பட உள்ளது.
இதற்கிடையில், ஐரோப்பிய சாம்பியன்ஸ் லீக் தொடரிலும் ஆர்சனல் அணி இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ளது. மாத இறுதியில் நடைபெறவுள்ள அந்தப் போட்டியில் வெற்றி பெற்றால், லீக் மற்றும் சாம்பியன்ஸ் லீக் ஆகிய இரு முக்கிய கோப்பைகளையும் ஒரே சீசனில் வென்ற அணியாக ஆர்சனல் புதிய வரலாறு படைக்கும் வாய்ப்பும் உருவாகியுள்ளது.
Read more: Results: இன்று வெளியாகிறது 10 ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள்.. ரிசல்ட்டை 6 வழிகளில் பார்க்கலாம்!



