இந்திய தலைமை நீதிபதி சூர்ய காந்த் தெரிவித்த சர்ச்சைக்குரிய கருத்துகளைத் தொடர்ந்து சமூக ஊடகங்களில் உருவான ‘காக்ரோச் ஜனதா பார்ட்டி’ (CJP) என்ற நையாண்டி இணைய இயக்கம் நாடு முழுவதும் பெரும் பேசுபொருளாக மாறியுள்ளது. வேலையற்ற இளைஞர்களை “கரப்பான் பூச்சிகள்” உடன் ஒப்பிட்ட நீதிபதியின் கருத்துகளுக்கு எதிராக உருவான இந்த டிஜிட்டல் இயக்கத்தின் ‘X’ கணக்கு தற்போது இந்தியாவில் முடக்கப்பட்டுள்ளது.
@CJP_2029 என்ற பெயரில் இயங்கிய அந்த கணக்கை திறக்க முயன்ற பயனர்களுக்கு, “சட்டப்பூர்வ கோரிக்கைக்கு இணங்க இந்த கணக்கு இந்தியாவில் முடக்கப்பட்டுள்ளது” என்ற அறிவிப்பு காட்டப்பட்டது. இதைத் தொடர்ந்து, இயக்கத்தின் நிறுவனர் அபிஜீத் திப்கே தனது சமூக ஊடகப் பதிவில், “இது எதிர்பார்க்கப்பட்டதே” என குறிப்பிட்டு, முடக்கப்பட்ட அறிவிப்பின் ஸ்கிரீன்ஷாட்டையும் பகிர்ந்தார்.
சமூக ஊடக தளமான X-இன் கொள்கைகளின்படி, அரசு அல்லது அதிகாரப்பூர்வ அமைப்புகளின் சட்டரீதியான கோரிக்கைகள் வந்தால், குறிப்பிட்ட நாடுகளில் கணக்குகளை கட்டுப்படுத்தும் அதிகாரம் அந்த தளத்துக்கு உள்ளது. இதனால், இந்தியாவில் மட்டும் அந்தக் கணக்கு முடக்கப்பட்டிருக்கலாம் என கருதப்படுகிறது.
‘காக்ரோச் ஜனதா பார்ட்டி’ வெறும் சில நாட்களில் இணையத்தில் அதிவேகமாக பரவிய டிஜிட்டல் இயக்கங்களில் ஒன்றாக மாறியது. குறிப்பாக அதன் இன்ஸ்டாகிராம் பக்கம் மிகக் குறுகிய காலத்திலேயே கோடிக்கணக்கான பின்தொடர்பவர்களை பெற்றதாக தகவல்கள் வெளியாகின. மேலும், ஆயிரக்கணக்கான இளைஞர்கள் ஆன்லைன் உறுப்பினர் விண்ணப்பங்கள் மூலம் இதில் இணைந்ததாகவும் கூறப்படுகிறது.
இந்த இயக்கம் உருவாக காரணமானது, தலைமை நீதிபதி சூர்ய காந்த் கடந்த வாரம் நீதிமன்ற விசாரணை ஒன்றின் போது தெரிவித்த கருத்துகளே. “வேலை இல்லாத சில இளைஞர்கள் கரப்பான் பூச்சிகளைப் போல இருக்கிறார்கள். அவர்கள் சமூக ஊடக ஆர்வலர்கள், ஊடகவியலாளர்கள் அல்லது தகவல் அறியும் உரிமை ஆர்வலர்களாக மாறி அனைவரையும் தாக்குகின்றனர்” என்ற அவரது கருத்துகள் இணையத்தில் கடும் எதிர்ப்பை கிளப்பின.
ஏற்கனவே வேலைவாய்ப்பு பற்றாக்குறை, போட்டித் தேர்வு சர்ச்சைகள், வாழ்க்கைச் செலவு உயர்வு போன்ற காரணங்களால் அதிருப்தியில் இருந்த இளைஞர்கள், இந்தக் கருத்தை மிகவும் கடுமையாக எடுத்துக்கொண்டனர். இதையடுத்து சமூக ஊடகங்களில் மீம்கள், நையாண்டி பதிவுகள், டிஜிட்டல் பிரச்சாரங்கள் வெடித்தன.
பின்னர் தலைமை நீதிபதி சூர்ய காந்த், தனது கருத்துகள் பொதுவாக அனைத்து வேலையற்ற இளைஞர்களையும் குறிக்கவில்லை என்றும், போலிப் பட்டங்கள் மற்றும் தவறான செயல்களில் ஈடுபடுவோரைக் குறித்தே கூறப்பட்டவை என்றும் விளக்கம் அளித்தார். இருப்பினும் சர்ச்சை அடங்காமல் மேலும் பெரிதாகியது.
இந்த இயக்கத்தை முன்னெடுத்த அபிஜீத் திப்கே, பாஸ்டன் பல்கலைக்கழகத்தில் மக்கள் தொடர்பியல் படித்தவர் என தகவல்கள் தெரிவிக்கின்றன. “எல்லா கரப்பான் பூச்சிகளும் ஒன்று சேர்ந்தால் என்ன ஆகும்?” என்ற ஒரு பதிவிலிருந்து இந்த முழு நையாண்டி இயக்கமும் தொடங்கியதாக கூறப்படுகிறது. பின்னர் சமூக ஊடக கணக்குகள், இணையதளம், கொள்கை அறிக்கை என அனைத்தும் விரைவாக உருவாக்கப்பட்டன.
‘வேலையில்லாமல் இருப்பது’, ‘எப்போதும் ஆன்லைனில் இருப்பது’, ‘அரசியலை விமர்சிப்பது’ போன்றவற்றை கிண்டலாக உறுப்பினர் தகுதிகளாக அறிவித்த இந்த இயக்கம், இணைய இளைஞர்களிடையே வேகமாக பரவியது. வேலையின்மை, ஊடக சாய்வு, கருத்து சுதந்திரம் மற்றும் அரசியல் அமைப்பின் மீது அதிகரித்து வரும் நம்பிக்கையின்மை போன்ற விஷயங்களையும் இந்த இயக்கம் முன்வைத்தது.
திரிணாமூல் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சித் தலைவர்கள் சிலரும் இந்த இயக்கத்தை சமூக ஊடகங்களில் பகிர்ந்து ஆதரவு தெரிவித்தனர். அதே நேரத்தில், பாஜக சார்பிலான பலர் இதை திட்டமிட்ட அரசியல் சமூக ஊடக பிரச்சாரமாகவே விமர்சித்தனர்.
திரிணாமூல் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சித் தலைவர்கள் சிலரும் இந்த இயக்கத்தை சமூக ஊடகங்களில் பகிர்ந்து ஆதரவு தெரிவித்தனர். அதே நேரத்தில், பாஜக சார்பிலான பலர் இதை திட்டமிட்ட அரசியல் சமூக ஊடக பிரச்சாரமாகவே விமர்சித்தனர்.
X கணக்கு முடக்கப்பட்டிருந்தாலும், இன்ஸ்டாகிராம் மற்றும் பிற சமூக ஊடக தளங்களில் இந்த இயக்கம் தொடர்ந்து செயல்பட்டு வருகிறது. “Cockroach is Back” என்ற புதிய பெயரில் மீண்டும் தோன்றிய அந்தக் குழு, “எங்களை இவ்வளவு எளிதாக நிறுத்த முடியாது” என்ற செய்தியையும் வெளியிட்டுள்ளது.
Read more: பாஜக எப்போது ஆட்சியை இழக்கும்? Axis My India நிறுவனர் பிரதீப் குப்தாவின் கணிப்பு இதுதான்..!



