சிக்கன் 65 இந்தியாவில் திருமண விருந்து முதல் சாலையோர ஹோட்டல்கள் வரை எங்கும் தவறாமல் காணப்படும் ஒரு பிரபலமான உணவு. காரம், மொறுமொறு சுவை, அடர் சிவப்பு நிறம் ஆகியவற்றால் அனைவரையும் கவரும் இந்த உணவின் பெயர் மட்டும் இன்று வரை பலருக்கும் புதிராகவே உள்ளது. “ஏன் 65?” என்ற கேள்விக்கு பல ஆண்டுகளாக பல்வேறு கதைகள் சொல்லப்படுகிறது.
தகவல்களின் படி, புகாரி ஹோட்டல் நிறுவனர் ஏ.எம். புகாரி 1965ஆம் ஆண்டு இந்த காரமான கோழி ஸ்டார்டர் உணவை அறிமுகப்படுத்தியதாக கூறப்படுகிறது. அதனால் அந்த ஆண்டை நினைவுகூர்ந்து “சிக்கன் 65” என்ற பெயர் சூட்டப்பட்டதாக நம்பப்படுகிறது. பின்னர் அதே பாணியில் சிக்கன் 78, சிக்கன் 82, சிக்கன் 90 போன்ற பெயர்களிலும் உணவுகள் அறிமுகமானது குறிப்பிடத்தக்கது.
மற்றொரு பிரபலமான கோட்பாட்டின்படி, உணவக மெனுவில் 65வது எண்ணில் இருந்த உணவை வாடிக்கையாளர்கள் “சிக்கன் 65” என்று கேட்டதால் அந்தப் பெயர் நிலைத்துவிட்டதாகக் கூறப்படுகிறது. மொழி தெரியாதவர்கள் பெயரைச் சொல்லாமல் எண்களை வைத்து ஆர்டர் செய்ததே இந்தப் பெயருக்குக் காரணம் என சிலர் நம்புகின்றனர்.
இதில் இன்னும் வினோதமான கோட்பாடுகளும் உள்ளன. சிலர், அந்த உணவில் 65 சிவப்பு மிளகாய்கள் பயன்படுத்தப்பட்டதாகக் கூறுகின்றனர். மற்றவர்கள், 65 நாள் வயதான கோழிக்குஞ்சுகளால் இந்த உணவு தயாரிக்கப்பட்டதாகவும் கூறுகிறார்கள். சில கதைகளில், கோழி 65 நாட்கள் ஊறவைக்கப்பட்டதாக கூட சொல்லப்படுகிறது.
உணவு வரலாற்றாசிரியர்கள் இவற்றை பெரிதாக ஏற்காவிட்டாலும், இந்தக் கதைகளே “சிக்கன் 65” என்ற பெயருக்கு காரணமாக அமைந்ததாக கூறப்படுகிறது. இந்த உணவு சென்னை நகரில் தோன்றியதாகக் கூறப்பட்டாலும், பின்னர் ஹைதராபாத் உள்ளிட்ட பல நகரங்களில் தனித்துவமான மசாலா மற்றும் தாளிப்பு முறைகளுடன் புதிய வடிவங்களில் பிரபலமடைந்தது.



