இந்திய அரசியல் மற்றும் சமூக ஊடகங்களில் தற்போது மிகப்பெரிய விவாதமாக மாறியுள்ளது “கரப்பான்பூச்சி ஜனதா கட்சி” எனப்படும் நையாண்டி இணைய இயக்கம். இணையத்தில் நகைச்சுவையாகத் தொடங்கிய இந்த அமைப்பு, சில நாட்களிலேயே கோடிக்கணக்கான பார்வைகளையும் மில்லியன் கணக்கான பின்தொடர்பவர்களையும் பெற்று அரசியல் சர்ச்சையின் மையமாக மாறியுள்ளது.
இந்த விவகாரம் தீவிரமடைந்ததற்கு முக்கிய காரணமாக அமைந்தது, அந்த இயக்கத்தின் நிறுவனர் அபிஜீத் திப்கே வெளியிட்ட இன்ஸ்டாகிராம் பகுப்பாய்வு தரவுகள். அவரது கூற்றுப்படி, “கரப்பான்பூச்சி ஜனதா கட்சி” இன்ஸ்டாகிராம் கணக்கின் பார்வையாளர்களில் 94 சதவீதத்திற்கும் அதிகமானோர் இந்தியாவைச் சேர்ந்தவர்கள். பாகிஸ்தான் ஆதரவு இருப்பதாக எழுந்த குற்றச்சாட்டுகளுக்கு இதுவே நேரடி பதிலாகப் பார்க்கப்பட்டது.
இந்த சர்ச்சையின் பின்னணி, இந்திய தலைமை நீதிபதி சூர்ய காந்த் கூறியதாக பரவிய “சில இளைஞர்கள் கரப்பான்பூச்சிகளைப் போன்றவர்கள்” என்ற கருத்திலிருந்து தொடங்கியது. இந்த கருத்து சமூக ஊடகங்களில் கடும் எதிர்வினையை ஏற்படுத்திய நிலையில், அதனை நையாண்டியாக மாற்றி இணைய பயனர்கள் “கரப்பான்பூச்சி ஜனதா கட்சி” என்ற பெயரில் ஒரு டிஜிட்டல் இயக்கத்தை உருவாக்கினர்.
சில நாட்களிலேயே இந்த இயக்கம் இன்ஸ்டாகிராம் மற்றும் எக்ஸ் தளங்களில் வெடித்தளவுக்கு வைரலானது. ஆயிரக்கணக்கான இளைஞர்கள் அந்தப் பெயரை தங்களது புரொஃபைல்களிலும் பதிவுகளிலும் பயன்படுத்தத் தொடங்கினர். இதன் தாக்கம் அதிகரித்த நிலையில், அந்த அமைப்பின் சமூக ஊடக கணக்குகள் முடக்கப்பட்டதாகவும், இணையதளம் செயலிழந்ததாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்தன.
இதற்கிடையில், மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு வெளியிட்ட பதிவுகள் மேலும் சர்ச்சையை அதிகரித்தன. “பாகிஸ்தானிடமிருந்து அங்கீகாரம் தேடுபவர்களையும் ஜார்ஜ் சோரோஸ் கும்பலையும் நினைத்துப் பரிதாபமாக இருக்கிறது” என்ற அவரது கருத்து, சிஜேபியை குறிவைத்து கூறப்பட்டதாக சமூக ஊடகங்களில் பரவலாகப் பேசப்பட்டது. அதற்கு பதிலளித்த அபிஜீத் திப்கே, “94% பார்வையாளர்கள் இந்தியர்கள் என்றால், இந்திய இளைஞர்களை ஏன் பாகிஸ்தானியர்கள் என கூறுகிறார்கள்?” என்று கேள்வி எழுப்பினார்.
மேலும், சுகந்தா மஜும்தார் உள்ளிட்ட பாஜக தலைவர்கள், அந்த இயக்கத்தின் பின்தொடர்பவர்களில் பெரும்பாலானோர் பாகிஸ்தானைச் சேர்ந்தவர்கள் என்று குற்றம் சாட்டினர். ஆனால் இதற்கு எதிராக சமூக ஊடகங்களில் பலர் தரவுகள் மூலம் பதிலடி கொடுத்து வருகின்றனர்.
இந்த சர்ச்சை தற்போது அரசியல் நிறமும் பெற்றுள்ளது. மஹுவா மொய்த்ரா, கீர்த்தி ஆசாத் உள்ளிட்ட எதிர்க்கட்சித் தலைவர்கள் அந்த நையாண்டி இயக்கத்துக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர். அதேபோல், பினராயி விஜயன் இந்தியாவில் அந்த அமைப்பின் எக்ஸ் கணக்கு முடக்கப்பட்டதை விமர்சித்துள்ளார்.
ஒரு சாதாரண இணைய நகைச்சுவையாகத் தொடங்கிய “கரப்பான்பூச்சி ஜனதா கட்சி”, தற்போது சமூக ஊடக சுதந்திரம், அரசியல் செல்வாக்கு, வெளிநாட்டு ஆதரவு குற்றச்சாட்டு மற்றும் இளைஞர்களின் இணைய எதிர்ப்புக் குரல் போன்ற பல்வேறு விவாதங்களின் மையமாக மாறியுள்ளது.



