கர்நாடக மாநிலத்தில் கடந்த 2023-ம் ஆண்டு நடந்த சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சி தனிப்பெரும்பான்மை உடன் வெற்றி பெற்று ஆட்சி அமைத்தது.. ஆட்சி அமையும் போது முதலமைச்சர் யார் என்பதில் சித்தராமையா, டி.கே சிவகுமாருக்கு கடும் போட்டி நிலவியது.. இதனையடுத்து கர்நாடகாவில் முதல்வர் சித்தராமையாவும், துணை முதல்வர் டி.கே. சிவக்குமாரும் தலா இரண்டரை ஆண்டுகள் முதல்வர் பதவியைப் பகிர்ந்துகொள்வார்கள் என்று காங்கிரஸ் மேலிடத்தால் 2023-ல் ஒப்பந்தம் செய்யப்பட்டதாகத் தகவல்கள் வெளியாகின..
இதையடுத்து கர்நாடக முதல்வராக சித்தராமையாவும், துணை முதல்வராக டி.கே.சிவகுமாரும் பதவி வகித்து வருகின்றனர்.. எனினும் 2.5 ஆண்டுகள் ஆன பிறகு, டி.கே.சிவகுமார் முதல்வராக வேண்டும் என்று அவரின் ஆதரவாளர்கள் குரல் கொடுத்து வந்தனர்.. இது காங்கிரஸ் கட்சிக்குள் அதிர்வலைகளை ஏற்படுத்தியது..
இந்த சூழலில் கர்நாடக அரசியல் தொடர்பாக காங்கிரஸ் மேலிடம் ஆலோசனை நடத்தியது.. காங்கிரஸ் தலைமை ராஜினாமா செய்யுமாறு கேட்டுக் கொண்டதைத் தொடர்ந்து, கர்நாடக முதலமைச்சர் சித்தராமையா நாளை தனது பதவியை ராஜினாமா செய்ய உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.. அவர் தனது ராஜினாமாவை முறைப்படி சமர்ப்பிப்பதற்காக ஆளுநர் தாவர்சந்த் கெலாட்டைச் சந்திக்க நேரம் கோரியுள்ளார்.
இந்த நிலையில் இன்று பெங்களூருவில் உள்ள தனது அதிகாரப்பூர்வ இல்லத்தில், தனது அமைச்சரவை சகாக்களுக்கு முதல்வர் சித்தராமையா காலை விருந்து அளித்தார். தற்போதைய துணை முதலமைச்சர் டி.கே. சிவக்குமார் மற்றும் பிற அமைச்சரவை சகாக்கள் இந்த காலை விருந்து நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர்.
இந்த காலை விருந்து நிகழ்ச்சியின்போது, கர்நாடக முதலமைச்சர் சித்தராமையாவும், துணை முதலமைச்சர் டி.கே. சிவக்குமாரும் ஒருவரையொருவர் ஆரத்தழுவிக்கொண்டனர். துணை முதலமைச்சர் டி.கே. சிவக்குமார், கர்நாடக முதலமைச்சர் சித்தராமையாவின் பாதங்களைத் தொட்டு வணங்கினார்.
அமைச்சரவை சகாக்களுடனான காலை விருந்து நிகழ்ச்சியின்போது, முதலமைச்சர் பதவியிலிருந்து விலகுவதாக சித்தராமையா அறிவித்தார். தேசிய அரசியலில் ஈடுபடுமாறும், முதலமைச்சர் பதவியிலிருந்து விலகுமாறும் காங்கிரஸ் கட்சியின் உயர்மட்டத் தலைமை தன்னிடம் கேட்டுக்கொண்டதாக அவர் அமைச்சர்களிடம் விளக்கினார். இதையடுத்து டி.கே சிவக்குமார் நாளை கர்நாடக முதல்வராக பதவியேற்பார் என்று கூறப்படுகிறது.. இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்றைக்குள் வெளியாகும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது..



