தமிழ்நாட்டில் காலியாக உள்ள ஒரு மாநிலங்களவை இடத்திற்கான இடைத்தேர்தல் ஜூன் 18ஆம் தேதி நடைபெறும் என்று இந்திய தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. அதிமுகவைச் சேர்ந்த முன்னாள் எம்.பி. சி.வி. சண்முகம் தனது மாநிலங்களவை உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்ததைத் தொடர்ந்து இந்த காலிப் பணியிடம் உருவாகியுள்ளது. அந்த இடத்தை நிரப்பவே தேர்தல் நடத்தப்படுகிறது என்று தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
தேர்தல் ஆணையம் வெளியிட்ட அட்டவணைப்படி, வேட்புமனு தாக்கல் ஜூன் 1 முதல் ஜூன் 8 வரை நடைபெறும். மனுக்கள் பரிசீலனை ஜூன் 9ஆம் தேதி நடைபெறுகிறது. வேட்புமனுக்களை திரும்பப் பெற கடைசி நாள் ஜூன் 11. வாக்குப்பதிவு மற்றும் வாக்கு எண்ணிக்கை ஜூன் 18ஆம் தேதி ஒரே நாளில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த சூழலில் காங். மேலிட பொறுப்பாளர் கிரிஷ் சோடங்கர் முதல்வர் விஜய்யை இன்று சந்தித்து பேசினார்.. அப்போது தவெக கூட்டணியில் இடம்பெற்றுள்ள காங்கிரஸ் கட்சிக்கு இந்த ராஜ்யசபா இடத்தை ஒதுக்க வேண்டும் என்று அவர் வேண்டுகோள் விடுத்தார்.. காங்கிரஸ் கட்சியின் கோரிக்கையை தீவிரமாக பரிசீலிப்பதாக முதல்வர் விஜய் கூறியதாக கிரிஷ் சோடங்கர் தெரிவித்தார்.
இந்த நிலையில் தமிழ்நாட்டில் காலியாக உள்ள ராஜ்யசபா எம்.பி பதவியை காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கியதாக தவெக தலைமை அறிவித்துள்ளது. இதுகுறித்து அக்கட்சி வெளியிட்டுள்ள அறிக்கையில் “ இம்மாதம் 18ஆம் தேதி தமிழ்நாட்டில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட உள்ள மாநிலங்களவை (Rajya Sabha) உறுப்பினருக்கான தேர்தலில், தமிழ்நாட்டில் தமிழக வெற்றிக் கழகம் தலைமையிலான கூட்டணியில் இடம்பெற்றுள்ள அகில இந்திய காங்கிரஸ் கட்சிக்கு மாநிலங்களவை உறுப்பினர் (Rajya Sabha Seat) இடம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.



