மத்திய ரயில்வே அமைச்சகத்தின் கீழ் இயங்கும் ரயில்வே ஆட்சேர்ப்பு வாரியம் (RRB), நாடு முழுவதும் உள்ள அனைத்து ரயில்வே மண்டலங்களிலும் பெருமளவிலான பணியிடங்களை நிரப்புவது குறித்த ஒரு சுருக்கமான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இந்த அறிவிப்பின் கீழ் மொத்தம் 6,565 ரயில்வே தொழில்நுட்புநர் (Technician) பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. தகுதியுள்ள விண்ணப்பதாரர்கள் ஜூன் 30 முதல் இணையம் வழியாக விண்ணப்பிக்கலாம்.
தேர்ந்தெடுக்கப்படும் விண்ணப்பதாரர்கள் அகமதாபாத், அஜ்மீர், பெங்களூரு, போபால், புவனேஸ்வர், பிலாஸ்பூர், சண்டிகர், சென்னை, குவஹாத்தி, ஜம்மு-ஸ்ரீநகர், கொல்கத்தா, மால்டா, மும்பை, முசாபர்பூர், பாட்னா, பிரயாக்ராஜ், ராஞ்சி, செகந்திராபாத், சிலிகுரி, திருவனந்தபுரம் மற்றும் கோரக்பூர் ஆகிய RRB மண்டலங்களில் பணியாற்ற வேண்டியிருக்கும்.
பணியிடங்கள் குறித்த விவரங்கள்:
தொழில்நுட்புநர் கிரேடு 1 (சிக்னல்) பணியிடங்களின் எண்ணிக்கை: 323
தொழில்நுட்புநர் கிரேடு 3 பணியிடங்களின் எண்ணிக்கை: 6,242
இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் 10-ஆம் வகுப்பு தேர்ச்சி மற்றும் தொடர்புடைய பிரிவில் ITI சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்.. அல்லது B.Sc, ஏதேனும் ஒரு பட்டப்படிப்பு அல்லது டிப்ளமோ (Diploma) தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
வயது வரம்பைப் பொறுத்தவரை, தொழில்நுட்புநர் கிரேடு 1 பணியிடங்களுக்கு 18 முதல் 33 வயது வரையிலும், தொழில்நுட்புநர் கிரேடு 3 பணியிடங்களுக்கு 18 முதல் 30 வயது வரையிலும் இருக்க வேண்டும். இத்தகுதிகளைக் கொண்டவர்கள் ஜூலை 29, 2026 வரை விண்ணப்பிக்கலாம்.
கணினி வழி எழுத்துத் தேர்வு, சான்றிதழ் சரிபார்ப்பு, மருத்துவப் பரிசோதனை ஆகியவற்றின் அடிப்படையில் இறுதித் தேர்வு நடைபெறும். தேர்ந்தெடுக்கப்படும் விண்ணப்பதாரர்களுக்கு, தொழில்நுட்புநர் கிரேடு 1 பணியிடங்களுக்கு மாதம் ரூ. 29,200-ம், தொழில்நுட்புநர் கிரேடு 3 பணியிடங்களுக்கு ரூ. 19,900-ம் ஊதியமாக வழங்கப்படும்.
கல்வித் தகுதி, எழுத்துத் தேர்வு பாடத்திட்டம், தேர்வு நடைமுறை, விண்ணப்பக் கட்டணம், விண்ணப்பிக்கும் முறை, மண்டல வாரியான காலிப்பணியிடங்கள் மற்றும் பிற விவரங்கள் குறித்த முழுமையான தகவல்களை ஜூன் 30-அன்று வெளியிடப்படவுள்ள முழுமையான அறிவிப்பில் காணலாம்.
Read More : ஓமன் கடற்கரை அருகே தீப்பிடித்து எரிந்த கப்பல்.. 24 இந்திய மாலுமிகளும் பாதுகாப்பாக மீட்பு..!



