சத்தீஸ்கரின் கோரியா மாவட்டத்தில் மணல் அள்ளுவது தொடர்பான நீண்டகாலத் தகராறில், பாரதிய ஜனதா கட்சியின் (பாஜக) தலைவர் ஒருவர் உட்பட குறைந்தது மூன்று பேர் தீயில் கருகி உயிரிழந்தனர் என்று காவல்துறை தெரிவித்தது.. மேலும் இச்சம்பவம் தொடர்பாக நான்கு பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சோன்ஹத் தாலுகாவிற்கு உட்பட்ட கட்கோடி கிராமத்தில் செவ்வாய்க்கிழமை இரவு இச்சம்பவம் நடந்தது. பாதிக்கப்பட்டவர்கள் 2 கார்களில் சென்று கொண்டிருந்தபோது, எதிர்த் தரப்பு கும்பல் திடீர் தாக்குதல் நடத்தி உள்ளனர்..
தாக்குதலில் ஈடுபட்டவர்கள் ஒரு லாரியைக் கொண்டு அந்த கார் மீது மோதியதில், கார் தீப்பிடித்து எரிந்தது. பாதிக்கப்பட்டவர்களில் சிலர் காரின் ஜன்னல்கள் மற்றும் கதவுகளை உடைத்து தப்பிக்க முயன்று வெற்றி பெற்றனர், ஆனால் சிலரால் முடியவில்லை. காரிலிருந்து தப்பியவர்கள் பின்னர் எதிர்த் தரப்பு கும்பலால் தாக்கப்பட்டதாக காவல்துறை தெரிவித்துள்ளது.
உயிரிழந்தவர்களில் ஒருவர் 60 வயதான பாரத் சிங் என்றும், அவர் பாஜக தலைவராக இருந்தவர் என்றும் காவல்துறை தெரிவித்துள்ளது. மற்ற இருவர் 32 வயதான வீரேந்திர பிரதாப் சிங் மற்றும் 53 வயதான நாகேந்திர சிங் ஆவர். வீரேந்திரா கூர்மையான ஆயுதத்தால் தாக்கப்பட்ட நிலையில், நாகேந்திரா 80 சதவீத தீக்காயங்களுக்கு ஆளாகியிருந்ததாக காவல்துறை தெரிவித்தது.
இந்த சம்பவம் தொடர்பாக நான்கு பேரை காவல்துறை கைது செய்துள்ளது, மேலும் விசாரணை நடைபெற்று வருகிறது. இமோதலுக்கான காரணத்தை விளக்கிய காவல்துறை, அப்பகுதியைச் சேர்ந்த திரிபாதி குடும்பத்தினருடன் மணல் அள்ளுவது தொடர்பாக பாரத் சிங்கிற்கு நீண்டகாலத் தகராறு இருந்ததாகவும் தெரிவித்துள்ளது..
செவ்வாய்க்கிழமையன்று ஏற்பட்ட தகராறைத் தொடர்ந்து இரு தரப்பினருக்கும் இடையிலான மோதல் தீவிரமடைந்து, இறுதியில் இந்த உயிரிழப்புகளுக்கு வழிவகுத்தது. .
“முதல் தகவல் அறிக்கையில் (FIR) 9 பேர் குற்றவாளிகளாகப் பெயரிடப்பட்டுள்ளனர், மேலும் சிலரும் குறிப்பிடப்பட்டுள்ளனர். அவர்களில் நான்கு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மீதமுள்ள குற்றவாளிகளைத் தேடும் பணி நடைபெற்று வருகிறது. இரு தரப்பினருக்கும் இடையே தகராறு இருந்து வந்தது,” என்று சுர்குஜா ஐஜி தீபக் குமார் ஜா செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
பாஜகவைச் சாடிய காங்கிரஸ்
இந்த சம்பவம் ஆளும் பாஜகவை காங்கிரஸ் கடுமையாக சாடி உள்ளது.. பாரத் சிங் பாஜகவுடன் தொடர்புடையவர் என்றும், மாநிலத்தில் மணல் அகழ்வு தொடர்பான தகராறுகள் அதிகரித்து வருவதாகவும் அக்கட்சி குற்றம் சாட்டியது. இருப்பினும், சிங் தங்கள் கட்சியுடன் கொண்டிருந்த தொடர்பு குறித்து பாஜக இதுவரை எந்த அறிக்கையையும் வெளியிடவில்லை.
“சத்தீஸ்கரில் அரசின் ஆதரவுடன் மணல் மாஃபியாக்கள் செயல்பட்டு வருகின்றனர். பாஜக தலைவர்களின் பாதுகாப்போடு சட்டவிரோத மணல் அகழ்வு நடைபெறுகிறது. உயிரிழந்தவர் (பரத் சிங்) ஒரு பாஜக தலைவராக இருந்தார்; தாக்குதல் நடத்தியதாகக் குற்றம் சாட்டப்பட்டவர்களும் பாஜகவுடன் தொடர்புடையவர்களே,” என்று சத்தீஸ்கர் மாநில காங்கிரஸ் தலைவர் தீபக் பைஜ் கூறினார்.
இந்த சம்பவம் குறித்து சத்ரிய சமூகத்தினரிடமிருந்தும் வலுவான எதிர்வினைகள் எழுந்துள்ளன.. அவர்கள் இது குறித்து மத்திய புலனாய்வுத் துறை (CBI) விசாரணை நடத்த வேண்டும் என்று கோரியுள்ளனர். முதல்வர் விஷ்ணு தேவ் சாய் இச்சம்பவத்தைக் கவனத்தில் கொண்டுள்ளார்.. இதில் சம்பந்தப்பட்ட எவரும் தப்பிக்க முடியாது என்றும் அவர் உறுதியளித்துள்ளார்.
Read More : வாகன ஓட்டிகள் கவனத்திற்கு..! பெட்ரோல், டீசல் விலை குறையுமா..? மத்திய அரசு முக்கிய தகவல்..!



