“தவெகவினர் இப்படி செய்வதை முதல்வர் விஜய்யே ஏற்றுக்கொள்ள மாட்டார்..” வீடியோ ஆதாரத்துடன் அண்ணாமலை விமர்சனம்..!

vijay annamalai

முதல்வர் விஜய் தலைமையிலான தவெக ஆட்சி அமைந்தது முதலே பல்வேறு போலி செய்திகள் பரப்பப்படுகின்றன.. குறிப்பாக ஏற்கனவே அதிமுக, திமுக ஆட்சியில் கொண்டு வரப்பட்ட திட்டங்கள் புதிதாக தவெக ஆட்சியில் கொண்டு வரப்பட்டது போல சமூக வலைதளங்களில் தவெகவினர் பதிவிட்டு வருகின்றனர்.. மேலும் AI மூலம் உருவாக்கப்பட்ட பல போலி செய்திகளை தமிழக அரசு வெளியிட்டதாக கூறியும் பதிவிட்டு வருகின்றனர்.. இதனால் உண்மை செய்தி எது பொய் செய்தி எது என்பதை கண்டறிவதிலேயே குழப்பம் நீடிக்கிறது..


இப்படி போலி செய்திகள் ஒருபுறம் என்றால், மறுபுறம் தவெக கட்சி நிர்வாகிகள் அரசு அலுவலகங்கள், மருத்துவமனைகளில் ஆய்வு நடத்தி அதை தங்கள் ரீல்ஸாக பதிவிட்டு வருகின்றனர்.. தவெகவினரின் இந்த செயல்களுக்கு சமூக வலைதளங்களில் பல்வேறு தரப்பினரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.. அதே போல் திமுக, அதிமுக, அமமுக உள்ளிட்ட கட்சி தலைவர்களும் இதை காட்டமாக விமர்சித்தனர்.. குறிப்பாக தவெக ஆட்சியை ரீல்ஸ் ஆட்சி என்றே எதிர்க்கட்சிகள் விமர்சித்து வருகின்றன..

இந்த நிலையில் காஞ்சிபுரத்தில் உள்ள அரசுப் பள்ளி வகுப்பறையில் முதல்வர் விஜய் புகைப்படத்தை மாட்டி ரீல்ஸ் எடுத்து வெளியிட்டுள்ளனர்.. இதுகுறித்து We The Leader இயக்கத்தின் தலைவர் அண்ணாமலை தவெக அரசை விமர்சித்து பதிவிட்டுள்ளார்.. இது தொடர்பான வீடியோவையும் அவர் பதிவிட்டுள்ளார்..

அவரின் பதிவில் “ காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூர் அருகே, ஒரு அரசுப் பள்ளி வகுப்பறையில், சுமார் 20க்கும் மேற்பட்ட தவெகவினர் சென்று, முதலமைச்சர் திரு விஜய் அவர்கள் புகைப்படத்தை வகுப்பறை சுவரில் மாட்டி, ரீல்ஸ் எடுத்து வெளியிட்டுள்ளனர். கடந்த ஐந்து ஆண்டு கால ஆட்சியில், அரசுப் பள்ளிகளுக்கு சரியான கட்டிடங்கள் கூட இல்லாமல் தரமிழந்து போய்விட்ட நிலையில், தற்போதைய பள்ளிக் கல்வித் துறை அமைச்சர், சகோதரர் திரு ராஜ்மோகன் அவர்களுக்கு, அவற்றின் பெருமையை மீட்டெடுக்கும் மிகப்பெரும் பணி முன்னால் இருக்கிறது.

ஆனால், தவெக கட்சியினரின் இதுபோன்ற செயல்பாடுகள், அரசுப் பள்ளிகளின் நிலையை மேலும் அவலப்படுத்தும் விதமாகவே இருக்கின்றன. ஆளுங்கட்சியினர் என்பதற்காக, அரசுப் பள்ளிகளில் சென்று, வகுப்புகளைத் தொந்தரவு செய்வதை, முதலமைச்சர் திரு விஜய் அவர்களே ஏற்றுக் கொள்ளமாட்டார் என்று நம்புகிறோம். மீண்டும் இது போன்ற செயல்கள் நடைபெறாதவாறு, தங்கள் கட்சியினருக்கு அறிவுறுத்தும்படி முதலமைச்சரையும், பள்ளிக் கல்வித் துறை அமைச்சரையும் வலியுறுத்துகிறோம்.” என்று குறிப்பிட்டுள்ளார்..

Read More : Flash : ஆட்டம் காட்டும் தங்கம் விலை.. இன்று மீண்டும் உயர்வு.. எவ்வளவு தெரியுமா..?

RUPA

Next Post

5 பேர் பலி..! போர் நிறுத்தம் இருந்தாலும் லெபனான் மீது மீண்டும் தாக்குதல் நடத்திய இஸ்ரேல்..!

Sat Jun 20 , 2026
இஸ்ரேலுக்கும் ஹிஸ்புல்லாவுக்கும் இடையே போர் நிறுத்தம் அமலுக்கு வந்த சில மணி நேரங்களுக்குப் பிறகு, மீண்டும் இஸ்ரேல் தாக்குதல் நடத்தி உள்ளது.. தெற்கு லெபனானில் இஸ்ரேலிய வான்வழித் தாக்குதல்கள் மற்றும் ஆளில்லா விமானத் தாக்குதல்கள் நடந்ததில் குறைந்தது 5 பேர் கொல்லப்பட்டனர். இந்த புதிய தாக்குதல்கள் காரணமாக, புதிதாக அறிவிக்கப்பட்ட போர் நிறுத்தத்தின் எதிர்காலம் மற்றும் அப்பகுதியில் மீண்டும் பதற்றம் அதிகரிக்க வாய்ப்புள்ளதா என்பது குறித்த கவலையை எழுப்பி உள்ளது.. […]
lebanon attack

You May Like