CRED நிறுவனத்தின் நிறுவனர் குணால் ஷா, உலகளவில் WhatsApp-ஐ வழிநடத்த Meta நிறுவனத்தில் இணையத் தயாராகி வருகிறார். Meta நிறுவனம் CRED-இல் 900 மில்லியன் அமெரிக்க டாலர்களை (சுமார் ரூ. 8,550 கோடி) முதலீடு செய்கிறது. இந்த ஃபின்டெக் (fintech) நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி (CEO) என்ற தனது செயல்பாட்டுப் பொறுப்பிலிருந்து விலகுவதாக குணால் ஷா நேற்று அறிவித்தார்.
CRED-இன் ‘சீரிஸ் H’ (Series H) நிதி திரட்டும் சுற்றின் ஒரு பகுதியாக Meta மேற்கொள்ளும் இந்த 900 மில்லியன் டாலர் முதலீட்டுடன் இணைந்து இந்த அறிவிப்பும் வெளியாகியுள்ளது. இந்த ஒப்பந்தத்தின் கீழ், பெங்களூரைச் சேர்ந்த இந்த ஃபின்டெக் நிறுவனத்தில் Meta சுமார் 20 சதவீத சிறுபான்மைப் பங்குகளைக் கைப்பற்றவுள்ளது.
இந்த முதலீட்டின் மூலம் CRED-இன் நிறுவன மதிப்பு (post-money valuation) சுமார் 4.5 பில்லியன் அமெரிக்க டாலராக (ரூ. 43,239 கோடி) உயர்ந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிதி திரட்டும் சுற்றில் நேரடி மூலதன முதலீடு மற்றும் இரண்டாம் நிலை பங்கு கொள்முதல் (secondary share purchases) ஆகிய இரண்டும் அடங்கும்.
நேற்று WhatsApp-இன் புதிய உலகளாவிய தலைவராக (Global Head) குணால் ஷாவை Meta நியமித்தது. CRED-இல் Meta நிறுவனம் 900 மில்லியன் டாலர் அளவிலான மிகப்பெரிய முதலீட்டை மேற்கொண்ட அதே வேளையில் இந்த நிகழ்வும் நடந்துள்ளது; இதனால் ஷா CRED-இன் CEO பதவியிலிருந்து விலகி Meta-வின் உலகளாவிய தலைமைத்துவக் குழுவில் இணையவுள்ளார்.
இதுகுறித்து தனது சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்ட குணால் ஷா “நீண்ட இடைவெளிக்குப் பிறகு…” என்று குறிப்பிட்ட குணால் ஷா, 2015 முதல் 2018 வரையிலான காலகட்டத்தில் தான் கற்றல், முதலீடு செய்தல் மற்றும் “நம்பகத்தன்மைக்கு ஏன் வெகுமதி அளிக்கக்கூடாது?” என்ற எளிய கேள்வியைப் பற்றிச் சிந்திப்பதில் ஈடுபட்டிருந்ததை நினைவு கூர்ந்தார்.
தனது சொந்த சேமிப்பிலிருந்து 1 மில்லியன் அமெரிக்க டாலரைப் பயன்படுத்தி, கிரெடிட் கார்டு கட்டணங்களைச் சரியான நேரத்தில் செலுத்தும் பயனர்களுக்கு வெகுமதிகளை அளிக்கும் நோக்கத்துடன் ஷா CRED நிறுவனத்தை தொடங்கினார்.
2019 மற்றும் 2025-க்கு இடைப்பட்ட காலத்தில், இந்நிறுவனம் பூஜ்ஜியத்திலிருந்து 17 மில்லியன் உறுப்பினர்களைக் கொண்டதாக வளர்ந்தது. உலகளாவிய முதலீட்டாளர்களிடமிருந்து 900 மில்லியன் டாலருக்கும் அதிகமான நிதியைத் திரட்டிய அதே வேளையில், இந்நிறுவனம் பணம் செலுத்துதல் (payments), கடன் வழங்குதல், காப்பீடு, வர்த்தகம், செல்வ மேலாண்மை மற்றும் கிரெடிட் கார்டுகள் எனப் பல்வேறு துறைகளில் தனது சேவைகளை விரிவுபடுத்தியது. மேலும், CRED நான்கு முறை ஊழியர் பங்கு உரிமைத் திட்டத்தின் (ESOP) கீழ் பங்குகளைத் திரும்ப வாங்கியுள்ளதாகவும், தனது ஆண்டு வருவாயை கிட்டத்தட்ட 325 மில்லியன் டாலராக (சுமார் ₹3,200 கோடி) உயர்த்தியுள்ளதாகவும் குணால் ஷா தெரிவித்தார்.
யார் இந்த குணால் ஷா?
குணால் ஷா, நிதி-தொழில்நுட்ப (fintech) துறையில் மதிப்புமிக்க ஸ்டார்ட்அப் அந்தஸ்தைப் பெற்ற CRED நிறுவனத்தின் நிறுவனர் ஆவார். டிஜிட்டல் பணப் பரிவர்த்தனை மற்றும் ரீசார்ஜ் தளமான ‘FreeCharge’-ஐ (இதை பின்னர் Snapdeal நிறுவனம் கையகப்படுத்தியது) இணைந்து நிறுவியதன் மூலம் இவர் பரவலாக அறியப்படுகிறார்.
1979-ல் பிறந்து மும்பையில் வளர்ந்த ஷா, வில்சன் கல்லூரியில் தத்துவவியலில் (Philosophy) பட்டம் பெற்றார்.
இவர் NMIMS-இல் எம்பிஏ (MBA) படிப்பில் சேர்ந்தாலும், தனது தொழில்முனைவோர் பயணத்தைத் தொடர அப்படிப்பிலிருந்து பாதியிலேயே விலகினார்.
குணால் ஷா 2018-ல் CRED-ஐ நிறுவினார். உறுப்பினர்களுக்கு மட்டுமேயான இத்தளம், கிரெடிட் கார்டு கட்டணங்களைச் சரியான நேரத்தில் செலுத்தும் பயனர்களுக்குச் சிறப்பு வெகுமதிகளை வழங்குவதன் மூலம் அவர்களை ஊக்குவிக்கிறது.
இது மிக விரைவாக இந்தியாவின் அதிக மதிப்புமிக்க நுகர்வோர் தொழில்நுட்ப நிறுவனங்களில் ஒன்றாக மாறியது.
CRED-ஐத் தொடங்குவதற்கு முன், 2010-ல் FreeCharge-ஐ இணைந்து நிறுவினார்.. 2015-ல் 450 மில்லியன் அமெரிக்க டாலருக்கு அது கையகப்படுத்தப்படுவதற்கு முன்பு, அது நாட்டின் மிகவும் பிரபலமான மொபைல் வாலட் செயலிகளில் ஒன்றாக வளர்ந்திருந்தது.



