உணவு அருந்திய பிறகு சிறிது நேரம் நடைப்பயிற்சி மேற்கொள்வது உடலில் பல்வேறு நேர்மறையான மாற்றங்களை ஏற்படுத்தும் என மருத்துவ வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.
உடல் பருமன் மற்றும் அதனால் ஏற்படும் சுகாதார சிக்கல்களை தவிர்க்க உடற்பயிற்சி அவசியம் என்று நிபுணர்கள் தொடர்ந்து அறிவுறுத்தி வருகின்றனர். தினமும் குறைந்தது அரை மணி நேரமாவது நடைப்பயிற்சி செய்ய வேண்டும் என்பது பொதுவான பரிந்துரையாக உள்ளது. எனினும், பணிச்சுமை காரணமாக பலருக்கும் காலையில் இதற்கான நேரம் கிடைப்பதில்லை. இதனால் பலரும் மாலை அல்லது இரவு நேரங்களில் நடைப்பயிற்சி மற்றும் உடற்பயிற்சிகளில் ஈடுபடுகின்றனர்.
அதேவேளையில், சாப்பிட்ட உடனே நடக்கக் கூடாது என்ற கருத்து நிலவி வந்தாலும், உணவுக்குப் பிறகு லேசாக நடப்பது உடலுக்கு பல நன்மைகளைத் தரும் என ஆய்வுகள் தெரிவிக்கின்றன. பொதுவாக உணவு சாப்பிட்ட பிறகு ரத்தத்தில் சர்க்கரையின் அளவு அதிகரிக்கும். அதனை சீராக வைக்க உணவுக்குப் பிறகு சிறிது நேரம் நடப்பது சிறந்த தீர்வாக அமைகிறது.
இருப்பினும், சாப்பிட்டவுடன் அதிக நேரம் அல்லது அதிவேகமாக நடக்கக் கூடாது என்றும் எச்சரிக்கப்படுகிறது. சாப்பிட்டு முடித்த 15 நிமிடங்களுக்குள் நடைப்பயிற்சியை தொடங்கி, 10 முதல் 15 நிமிடங்கள் வரை மட்டுமே நடக்க வேண்டும் என நிபுணர்கள் குறிப்பிடுகின்றனர். இவ்வாறு செய்யும்போது ரத்தத்தில் சேரும் சர்க்கரையை தசைகள் நேரடியாக எடுத்துக்கொள்கின்றன. இதனால் ரத்த சர்க்கரை அளவு திடீரென உயர்வது தடுக்கப்பட்டு சமநிலையில் பராமரிக்கப்படுகிறது.
குறிப்பாக கார்போஹைட்ரேட் அதிகம் உள்ள உணவுகளை சாப்பிட்ட பிறகு, நீண்ட நேரம் கழித்து அரை மணி நேரம் நடப்பதை விட, உடனே 10 நிமிடங்கள் நடப்பதே அதிக பலன் தரும் என கூறப்படுகிறது. மேலும், அலுவலகங்களில் படிகளில் ஏறி இறங்குவது போன்ற எளிய செயல்பாடுகளும் நன்மை அளிக்கும். அதேசமயம், வயிறு நிறைய சாப்பிட்ட பிறகு கடுமையான பயிற்சிகளை தவிர்க்க வேண்டும் என்றும், உணவில் நார்ச்சத்து மற்றும் இரும்புச்சத்து உள்ள பொருட்களை அதிகளவில் சேர்த்துக்கொள்வது நல்லது என்றும் நிபுணர்கள் அறிவுறுத்துகின்றனர்.



