இந்திய சினிமாவில் முடிசூடாத் திரைக்கதை மன்னர்.. அசாத்திய இயக்குநர்.. பாக்யராஜ் மறைவுக்கு மு.க.ஸ்டாலின் இரங்கல்..!

bhagyaraj stalin

நடிகரும் திரைப்பட இயக்குனருமான பாக்யராஜ் உடல்நலக் குறைவால் சென்னையில் காலமானார். மாரடைப்பு காரணமாக அவர் உயிரிழந்தார். அவருக்கு வயது 73. இன்று காலை அவருக்கு மாரடைப்பு ஏற்பட்ட நிலையில் அவர் மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டார். எனினும் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார்..


தனது குரு பாரதிராஜா காலமான 2 வாரத்திலேயே பாக்யராஜ் காலமான சம்பவம் தமிழ் திரையுலகில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. உடல் ஆரோக்கியத்துடன் இருந்த பாக்யராஜ் தற்போது மாரடைப்பு காரணமாக உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.  அவரின் மறைவுக்கு பல்வேறு பிரபலங்கள், அரசியல் தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். 

இந்த நிலையில் முன்னாள் முதல்வரும் திமுக தலைவருமான ஸ்டாலின் பாக்யராஜ் மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ளார்.. இதுகுறித்து தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர் “ ஆசான் மறைந்த சில வாரங்களிலேயே அவரது மாணவரையும் இழந்துவிட்டது தமிழ்த் திரையுலகம்!

இந்திய சினிமாவில் முடிசூடாத் திரைக்கதை மன்னராக, அனைவரையும் ஈர்த்த யதார்த்த நாயகனாக, சிக்கலான சூழலையும் சிறிய வசனத்தில் கடத்திவிடும் ஆற்றல் பெற்ற எழுத்தாளராக என எல்லாவற்றிலும் வெற்றிபெற்ற அசாத்திய இயக்குநராக வலம் வந்தவர் திரு. பாக்யராஜ் அவர்கள்.

தன்னைப் போலவே மேலும் பலரை இயக்குநர்களாக வளர்த்தெடுத்த பெருமைக்குரியவர். சில மாதங்களுக்கு முன்புதான், திரு. பாக்யராஜ் அவர்கள் திரையுலகில் 50 ஆண்டுகாலத்தை நிறைவுசெய்ததற்கான விழாவில் கலந்துகொண்டு, முதலமைச்சராக மட்டுமின்றி, அவரது இரசிகனாகவும் அந்த விழாவில் பேசியிருந்தேன். அந்த நினைவுகள் இன்னும் பசுமையாக உள்ளன.

திரைத்துறையில் இன்னும் பல ஆண்டுகள் பங்களிக்கும் வாய்ப்பையும் ஆற்றலையும் பெற்றிருந்த அவர் தம் வாழ்வை நிறைவு செய்து கொண்டுவிட்டது பெரும் இழப்பு. அவரை இழந்து தவிக்கும் திருமதி. பூர்ணிமா பாக்யராஜ், சாந்தனு, சரண்யா உள்ளிட்ட குடும்பத்தினருக்கும் திரைத்துறை நண்பர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கல்கள். தமது படைப்புகளால் பாக்யராஜ் அவர்கள் என்றென்றும் தமிழ்நாட்டு மக்களின் பிரிக்க முடியாத அங்கமாகத் தொடர்ந்து வாழ்வார்.” என்று குறிப்பிட்டுள்ளார்.

RUPA

Next Post

Flash : மறைந்த இயக்குநர் பாக்யராஜ் உடலுக்கு அரசு மரியாதை.. முதல்வர் விஜய் அறிவிப்பு..!

Sat Jun 27 , 2026
மறைந்த இயக்குநர் பாக்யராஜின் இறுதி பயணத்திற்கு அரசு மரியாதை அளிக்கப்படும் என்று முதல்வர் விஜய் அறிவித்துள்ளார். திரைத்துறைக்கு பாக்யராஜ் அளித்த பங்கேற்பை போற்றும் வகையில் அரசு மரியாதை அளிக்கப்படும். என்றும் அவர் தெரிவித்துள்ளார். இதுகுறித்து முதல்வர் விஜய் தனது எக்ஸ் பக்க பதிவில் “ தமிழ்த் திரையுலகின் தலைசிறந்த இயக்குநர், நடிகர், திரைக்கதை ஆசிரியர், வசனகர்த்தா, இசையமைப்பாளர் என பன்முகத் திறமையால் முத்திரை பதித்த திரு. கே. பாக்யராஜ் அவர்கள் […]
bhagraj vijay

You May Like