மறைந்த இயக்குநர் பாக்யராஜின் இறுதி பயணத்திற்கு அரசு மரியாதை அளிக்கப்படும் என்று முதல்வர் விஜய் அறிவித்துள்ளார். திரைத்துறைக்கு பாக்யராஜ் அளித்த பங்கேற்பை போற்றும் வகையில் அரசு மரியாதை அளிக்கப்படும். என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து முதல்வர் விஜய் தனது எக்ஸ் பக்க பதிவில் “ தமிழ்த் திரையுலகின் தலைசிறந்த இயக்குநர், நடிகர், திரைக்கதை ஆசிரியர், வசனகர்த்தா, இசையமைப்பாளர் என பன்முகத் திறமையால் முத்திரை பதித்த திரு. கே. பாக்யராஜ் அவர்கள் மறைந்த செய்தியறிந்து மிகுந்த அதிர்ச்சியும், ஆழ்ந்த வேதனையும் அடைந்தேன்.
தனித்துவமான கதையாக்கம், நகைச்சுவை கலந்த நடிப்பு, கிராமிய வாழ்வியல் மற்றும் குடும்ப உறவுகளின் ஆழமான உணர்வுகளை பிரதிபலிக்கும் திரைப்படங்கள் மூலம் தமிழ் மக்களின் மனதில் நீங்கா இடம்பிடித்த திரு.கே. பாக்யராஜ் அவர்களின் பங்களிப்பு தமிழ்த் திரைப்பட உலகிற்கு அளப்பரியதாகும்.
அவரது ஒவ்வொரு படைப்பும் பொழுதுபோக்கோடு, மனிதநேயம் மற்றும் சமூக விழுமியங்களை பேசும் காலத்தால் அழியாத நினைவுகளாக என்றும் நிலைத்திருக்கும். அவரது மறைவு தமிழ்த் திரையுலகிற்கு ஈடுசெய்ய முடியாத பேரிழப்பாகும். திரு.கே.பாக்யராஜ் அவர்களை இழந்து வாடும் குடும்பத்தினருக்கும், உறவினர்களுக்கும், நண்பர்களுக்கும், திரைத்துறையினருக்கும் மற்றும் ரசிகர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்கிறேன். அவரது ஆன்மா இறைவன் திருவடியில் இளைப்பாற பிரார்த்திக்கிறேன்.
திரைத்துறையில் திரு. கே.பாக்யராஜ் அவர்களின் பங்களிப்பைப் போற்றி, அஞ்சலி செலுத்தும் வகையில் அவரது இறுதிப் பயணத்திற்கு அரசு மரியாதை வழங்கப்படும்.” என்று தெரிவித்துள்ளார்..
பிரபல நடிகரும் திரைப்பட இயக்குனருமான பாக்யராஜ் மாரடைப்பால் இன்று சென்னையில் காலமானார். அவருக்கு வயது 73.
தமிழ் திரைப்பட துறையில் பன்முகம் கொண்ட ஆளுமைகளில் பாக்யராஜும் ஒருவர். நடிகர் இயக்குனர், தயாரிப்பாளர், இசையமைப்பாளர், திரைக்கதை ஆசிரியர் என பன்முகங்களை கொண்டவர் பாக்யராஜ். 1977-இல் ஜி. ராமகிருஷ்ணன், பாரதிராஜாவிடம் உதவி இயக்குனராக தனது சினிமா வாழ்க்கையை தொடங்கினார். பாரதிராஜா இயக்கிய 16 வயதினிலே, கிழக்கே போகும் ரயில் போன்ற படங்களில் உதவி இயக்குனராக பணியாற்றினர்.
திரைக்கதை மன்னர் என்று போற்றப்பட்ட பாக்யராஜ், 1979-ம் ஆண்டு சுவரில்லா சித்திரங்கள் என்ற படத்தின் மூலம் இயக்குனராக அவதாரம் எடுத்தார். பாரதிராஜா இயக்கிய புதிய வார்ப்புகள் படத்தில் நடிகராக அறிமுகமானார். தனது 50 ஆண்டுகளாக திரை வாழ்க்கையில் 25-க்கு மேற்பட்ட படங்களை எழுதி இயக்கி உள்ளார்.. சுமார் 75க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார்..
ஒரே ஆண்டில் 4 ஹிட் படங்களை கொடுத்தவர், இயக்கிய முதல் 7 படங்களிலும் வெற்றி தந்தவர் என்ற சிறப்பும் பாக்யராஜுக்கு உண்டு. அமிதாப் பச்சன் நடித்த ஆக்ரிஸ்தா படத்தை இயக்கி பாலிவுட் திரையுலகையை திரும்பி பார்க்க வைத்தர் பாக்ய்ராஜ். தனது எழுத்து, நடிப்புக்காக தமிழ்நாடு அரசின் விருதுகளையும், ஃபிலிம்ஃபேர் விருதுகளையும் அவர் பெற்றுள்ளார். வாழ்நாள் சாதனையாளர் விருது, சைமா விருதுகளையும் பாக்யராஜ் பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.



