இன்றைய காலகட்டத்தில் மனிதர்களிடம் பணம் இருக்கலாம்; ஆனால் அதைவிட அதிகமாக பலவிதமான நோய்கள் அதிகரித்து வருகின்றன. சளி, காய்ச்சல் முதல் கேன்சர் போன்ற பெரிய நோய்கள் வரை இன்று சாதாரணமாகி விட்டன. இதற்கான முக்கிய காரணங்களில் ஒன்று, நமது வாழ்க்கை முறை மற்றும் உணவுப் பழக்கங்கள் ஆகும்.
நமது முன்னோர்கள் இதுபோன்ற நோய்களால் அதிகம் பாதிக்கப்படுவதை நாம் பெரிதாகக் காணவில்லை. காரணம், அவர்கள் உணவையே மருந்தாகக் கருதி வாழ்ந்தனர். ஆனால் இன்றைய காலத்தில் பலர் உணவுக்குப் பதிலாக மருந்துகளையே அதிகமாக சார்ந்து, தினமும் பல மாத்திரைகளை எடுத்துக் கொள்ளும் நிலை உருவாகியுள்ளது.
இதனால், சிறிய காய்ச்சல், தலைவலி, செரிமான பிரச்சனை போன்றவற்றிற்கு உடனடியாக மருந்துகளை எடுத்துக் கொள்ளாமல், நம் சமையலறையில் இருக்கும் இயற்கை பொருட்களை பயன்படுத்தி, உணவின் மூலமாகவே உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்துவது சிறந்த வழியாக இருக்கும். அந்த வகையில், நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவும் மற்றும் காரசாரமான சுவையால் நாக்கிற்கு பிடித்தமான உணவாக இருக்கும் பூண்டு சாதம் செய்வது பற்றி இங்கே எளிமையாக பார்க்கலாம்.
பூண்டு இயற்கையாகவே பல ஆரோக்கிய நன்மைகள் கொண்ட ஒரு பொருளாக கருதப்படுகிறது. இது செரிமானத்தை மேம்படுத்த உதவுவதோடு, உடலில் சேரும் தேவையற்ற கொழுப்பை குறைக்கவும் உதவலாம். இந்த உணவில் பயன்படுத்தப்படும் மிளகு மற்றும் சீரகம் சளி தொடர்பான பிரச்சனைகளுக்கு ஆறுதல் தரும் தன்மை கொண்டதாக பார்க்கப்படுகிறது. மேலும் உடலுக்கு தேவையான வெப்பத்தை சமநிலையாக வைத்திருக்கவும் உதவுகின்றன.
இதில் சேர்க்கப்படும் நல்லெண்ணெய் மற்றும் கறிவேப்பிலை உணவுக்கு சிறந்த மணமும் சுவையும் தருகிறது. இதனால் சாப்பிடும் ஆர்வம் அதிகரித்து, ஆரோக்கியமான உணவை ரசித்து சாப்பிட முடியும். இந்த எளிய முறையில் தயாரிக்கப்படும் பூண்டு சாதம், தினசரி மதிய உணவிற்கு சிறந்த தேர்வாக இருக்கும்
தேவையான பொருட்கள்
- சாதம் – 2 கப் (உதிரியாக வடித்தது)
- பூண்டு – 15 முதல் 20 பற்கள் (தோல் உரித்தது)
- நல்லெண்ணெய் – 3 டேபிள் ஸ்பூன்
- கடுகு – 1 டீஸ்பூன்
- உளுத்தம் பருப்பு – 1 டீஸ்பூன்
- கடலைப் பருப்பு – 1 டீஸ்பூன்
- காய்ந்த மிளகாய் – 3
- கறிவேப்பிலை – ஒரு கொத்து
- பெருங்காயத் தூள் – ஒரு சிட்டிகை
- மஞ்சள் தூள் – 1/4 டீஸ்பூன்
- உப்பு – தேவையான அளவு
அரைப்பதற்கு:
- மிளகு – 1 டீஸ்பூன்
- சீரகம் – 1 டீஸ்பூன்
- காய்ந்த மிளகாய் – 2
செய்முறை
முதலில் மிளகு, சீரகம் மற்றும் காய்ந்த மிளகாயை எண்ணெய் இல்லாமல் லேசாக வறுத்து ஆறவைத்து பொடியாக அரைத்துக் கொள்ளவும்.
அதே பாத்திரத்தில் நல்லெண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு, உளுத்தம் பருப்பு, கடலைப் பருப்பு மற்றும் காய்ந்த மிளகாய் சேர்த்து பொன்னிறமாக வதக்கவும்.
பின் பூண்டு பற்களை சேர்த்து மெதுவான தீயில் நன்றாக வதக்க வேண்டும். பூண்டு லேசாக பொன்னிறமாகும் வரை சுட்டுக்கொள்ளவும்.
அதனைத் தொடர்ந்து கறிவேப்பிலை, பெருங்காயம் மற்றும் மஞ்சள் தூள் சேர்த்து கிளறவும்.
இறுதியாக சாதம், உப்பு மற்றும் அரைத்து வைத்த மிளகுப் பொடியை சேர்த்து, சாதம் உடையாமல் மெதுவாக கலந்து இறக்கவும். சுவையான பூண்டு சாதம் ரெடி..
Also Read: அட நம்ம விஜய் கூட நடிச்சவங்களா இவங்க? அடையாளமே தெரியாமல் மாறிய 90ஸ் க்ரஷ்!



