பொதுவாக நாம் வீடு, கடை போன்றவற்றை வாடகைக்கு எடுத்து பயன்படுத்துவதைப் பார்த்திருப்போம். இன்றைய நவீன காலத்தில் ஆடைகளைக் கூட வாடகைக்கு எடுத்து பயன்படுத்தும் நடைமுறை உள்ளது. ஆனால், “ஒரு பெண்ணையே வாடகைக்கு எடுத்துக்கொள்ளலாம்” என்று கூறினால் உங்களால் நம்ப முடிகிறதா? இணையதளங்கள் மூலம் பல்வேறு வித்தியாசமான சேவைகள் கிடைத்து வரும் இந்த காலகட்டத்தில், ஒரு பெண் தன்னையே “வாடகைக்கு எடுத்துக்கொள்ளலாம்” என்று விளம்பரப்படுத்திய சம்பவம் சமூக வலைதளங்களில் வேகமாக பரவி பலரது கவனத்தையும் ஈர்த்து வருகிறது.
அதாவது, நெருங்கிய நண்பர்கள் அல்லது உறவினர்கள் இல்லாமல் தனிமையில் வாழும் நபர்களைக் குறிவைத்தே அந்தப் பெண் இந்த வித்தியாசமான விளம்பரத்தை சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ளார். தனிமையைப் பகிர்ந்து கொள்ள ஒருவரைத் தேடுபவர்களுக்கு தன்னுடைய சேவையை வழங்குவதாக அவர் கூறியிருப்பது பலரின் கவனத்தை ஈர்த்துள்ளது.
மேலைநாடுகளில் ‘வாடகைக்குத் தோழன்/தோழி’ (Rent-a-Friend) போன்ற சேவைகள் அறியப்பட்டு வரும் நிலையில், தற்போது இந்திய சமூக வலைதளங்களிலும் அதைப் போன்ற பதிவுகள் தோன்றத் தொடங்கியிருப்பது பலரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது. இருப்பினும், இத்தகைய விளம்பரங்கள் பாதுகாப்பு தொடர்பான கவலைகளை ஏற்படுத்தக்கூடியவை என்றும், அவை தவறாகப் பயன்படுத்தப்பட்டு தேவையற்ற குற்றச் சம்பவங்களுக்கு வழிவகுக்கும் அபாயம் இருப்பதாகவும் ஒரு தரப்பினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
இந்நிலையில், அந்தப் பெண் தன்னுடன் உணவகத்திற்கு வந்து ஒன்றாக அமர்ந்து காபி குடிக்க ரூ.1,500 கட்டணம். இருசக்கர வாகனத்தில் ஒன்றாகப் பயணிப்பதற்கு ரூ.4,000 கட்டணம். வணிக வளாகங்களுக்கு ஒன்றாகச் செல்வதற்கு ரூ.4,500 கட்டணம் நிர்ணயித்துள்ளார். அது மட்டும் இல்லாமல், வீட்டிலிருந்து ஒன்றாக இணைந்து சமைப்பதற்கு ரூ.3,500 கட்டணமும், வார இறுதி நாட்களான சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் இரண்டு நாட்கள் முழுமையாகத் துணையாக இருப்பதற்கு மிக அதிகபட்சமாக |ரூ.10,000 கட்டணமும் விதித்துள்ளார்.
திரையரங்குகளுக்குச் சென்று படம் பார்ப்பது உள்ளிட்ட பல்வேறு அன்றாடச் செயல்பாடுகளுக்குத் தனித்தனி விலைப் பட்டியலை அவர் வெளியிட்டுள்ள விதம், நெட்டிசன்கள் மத்தியில் பேசுபொருளாக மாறியுள்ளது. மேலும், இது சைபர் குற்றங்களுக்கும், பண மோசடிகளுக்கும் வழிவகுக்கக் கூடும் என்பதால் பொதுமக்கள் விழிப்புடன் இருக்க வேண்டும் எனத் தகவல் தொழில்நுட்ப வல்லுநர்கள் எச்சரிக்கின்றனர்.
Also Read: 11 மாத குழந்தை கொடூரக் கொலை; நாடகமாடிய பெற்றோர் சிக்கியது எப்படி? விசாரணையில் பகீர் தகவல்..



