வெள்ளி கொலுசு மற்றும் மெட்டி போன்ற நகைகள் சில நாட்கள் பயன்படுத்திய பிறகு கருமை படர்வது இயல்பான ஒன்றுதான். குறிப்பாக வியர்வை, ஈரப்பதம் மற்றும் தினசரி பயன்பாடு காரணமாக அவற்றின் பளபளப்பு குறைந்து விடும். ஆனால் வீட்டில் இருக்கும் சில எளிய பொருட்களை பயன்படுத்தியே அவற்றை மீண்டும் புதிதுபோல் மின்னச் செய்யலாம்.
இதற்கு முதலில் ஒரு பாத்திரத்தில் வெதுவெதுப்பான நீரை எடுத்து, அதில் ஒரு டீஸ்பூன் பேக்கிங் சோடா சேர்த்து கெட்டியான கலவையாக தயாரிக்க வேண்டும். அந்தக் கலவையை மென்மையான துணி அல்லது பிரஷ் கொண்டு வெள்ளி நகைகளின் மீது தடவி, சில நிமிடங்கள் கழித்து மெதுவாக தேய்த்து சுத்தமான நீரில் கழுவினால், படிந்திருக்கும் கருமை மற்றும் அழுக்குகள் நீங்கி பளபளப்பு திரும்பும்.
மற்றொரு எளிய வழியாக, லேசான சோப்பு கலந்த வெதுவெதுப்பான நீரில் கொலுசு அல்லது மெட்டியை 5 முதல் 10 நிமிடங்கள் வரை ஊறவைத்து, பின்னர் மென்மையான பிரஷ் கொண்டு சுத்தம் செய்து கழுவலாம். அதன் பிறகு பருத்தித் துணியால் நன்றாகத் துடைத்து உலர்த்தினால், வெள்ளி நகைகள் மீண்டும் மின்னும் தோற்றத்தைப் பெறும்.
அதேபோல், அலுமினியம் ஃபாயிலையும் இதற்குப் பயன்படுத்தலாம். ஒரு பாத்திரத்தில் அலுமினியம் ஃபாயிலை விரித்து வைத்து, அதில் வெதுவெதுப்பான நீர், இரண்டு டீஸ்பூன் பேக்கிங் சோடா மற்றும் சிறிதளவு உப்பு சேர்த்து கலக்க வேண்டும். பின்னர் அந்தக் கலவையில் வெள்ளி நகைகளை சுமார் 10 நிமிடங்கள் ஊறவைத்து, சுத்தமான நீரில் கழுவி மென்மையான துணியால் துடைத்தால், கருமை குறைந்து பழைய பளபளப்பு மீண்டும் கிடைக்கும்.
இந்த எளிய வீட்டுக் குறிப்புகளை அவ்வப்போது பின்பற்றினால், வெள்ளி கொலுசு மற்றும் மெட்டி போன்ற நகைகளை அதிக செலவில்லாமல் நீண்ட நாட்கள் பளபளப்பாக பராமரிக்கலாம்.



