தினமும் ஒரே மாதிரியான புளி சாதம், எலுமிச்சை சாதம் அல்லது தேங்காய் சாதம் செய்து போரடித்துவிட்டதா? அப்படியானால், வீட்டிலேயே எளிதாக செய்யக்கூடிய கறிவேப்பிலை மசாலா சாதத்தை ஒருமுறை செய்து பாருங்கள். வழக்கமான வெரைட்டி ரைஸ்களிலிருந்து சற்று வித்தியாசமான இந்த உணவு, மணமும் சுவையும் நிறைந்ததாக இருக்கும். இதில் பயன்படுத்தப்படும் மசாலா பொருட்கள் காரணமாக, பிரியாணியைப் போன்ற தனித்துவமான சுவை கிடைக்கும்.
அதே நேரத்தில், கறிவேப்பிலையின் சத்துக்களும் முழுமையாக கிடைப்பதால், இது சுவையுடன் ஆரோக்கியத்தையும் தரும். வேலைக்குச் செல்பவர்கள், பேச்சுலர்கள் மற்றும் குழந்தைகளுக்கு மதிய உணவு தயாரிக்கும் அம்மாக்களுக்கு இந்த ரெசிபி மிகவும் பயனுள்ளதாக இருக்கும். கறிவேப்பிலை பிடிக்காதவர்கள்கூட இந்த சாதத்தை விரும்பி சாப்பிடுவார்கள்.
இந்த சாதத்தை தயாரிக்க முதலில் அரிசியை வேகவைத்து, உதிரியாக ஆறவிட வேண்டும். பிறகு ஒரு கடாயில் சிறிதளவு உளுத்தம்பருப்பை பொன்னிறமாக வறுத்து, அதனுடன் எள் சேர்த்து வறுக்க வேண்டும். எள் வெடிக்கத் தொடங்கியதும் கறிவேப்பிலை மற்றும் சீரகத்தை சேர்த்து ஒரு நிமிடம் வதக்கி அடுப்பை அணைக்கவும். இந்தக் கலவை சற்று சூடாக இருக்கும்போதே மிக்ஸியில் போட்டு நன்றாக அரைத்துக் கொள்ள வேண்டும். இந்த மசாலா பொடியை முன்கூட்டியே தயாரித்து, காற்று புகாத டப்பாவில் ஒரு வாரம் வரை சேமித்தும் பயன்படுத்தலாம்.
அதே கடாயில் எண்ணெய் ஊற்றி, பொடியாக நறுக்கிய வெங்காயம் மற்றும் நீளவாக்கில் கீறிய பச்சை மிளகாயை சேர்த்து வதக்க வேண்டும். வெங்காயம் மென்மையாக மாறியதும் இஞ்சி-பூண்டு விழுது சேர்த்து அதன் பச்சை வாசனை நீங்கும் வரை கிளற வேண்டும். அதன் பிறகு வேகவைத்த பட்டாணியை சேர்த்து சிறிது நேரம் வதக்கி, தேவையெனில் கொஞ்சம் தண்ணீர் சேர்த்து கலவையை ஒன்றாக சேரும் வரை சமைக்கலாம்.
பின்னர் வேகவைத்த சாதத்தை சேர்த்து, அரைத்த கறிவேப்பிலை மசாலா பொடியையும் தேவையான உப்பையும் கலந்து மெதுவாக கிளற வேண்டும். இறுதியாக இரண்டு நிமிடங்கள் மிதமான தீயில் வைத்து சமைத்து அடுப்பை அணைக்கவும். கடைசியாக நெய்யில் வறுத்த முந்திரிப்பருப்பை மேலே தூவினால் சுவை இன்னும் அதிகரிக்கும். விருப்பமிருந்தால் முந்திரிக்குப் பதிலாக வறுத்த வேர்க்கடலையையும் சேர்க்கலாம். இவ்வாறு செய்தால் மணமும் சுவையும் நிறைந்த கறிவேப்பிலை மசாலா சாதம் சில நிமிடங்களில் தயார். முடி உதிர்வு போன்ற பிரச்சனை இருப்பவர்கள், இந்த சாதம் சாப்பிடுவதால் நல்ல பலன் கிடைக்கும்..



