அன்றாட அவசரமான வாழ்க்கை சூழலில் பலர் தங்களது உடல் ஆரோக்கியத்தை கண்டுகொள்வதே இல்லை. குறிப்பாக, வேலைப் பளு காரணமாகச் சிறுநீரை நீண்ட நேரம் அடக்கி வைக்கும் பழக்கம் பலரிடமும் காணப்படுகிறது. ஆனால், இந்த அலட்சியப் போக்கு கடுமையான பின்விளைவுகளை ஏற்படுத்தும் என வனபர்த்தி அரசு மருத்துவமனையின் அறுவை சிகிச்சை நிபுணர் டாக்டர் ராஜ்குமார் எச்சரித்துள்ளார்.
பொதுவாக, கழிவுகள் நிரம்பும்போது சிறுநீர்ப்பை விரிவடைந்து, சிறுநீர் கழித்தவுடன் மீண்டும் தனது இயல்பு நிலைக்குத் திரும்பும் தன்மையைக் கொண்டது. ஆனால், சிறுநீரைத் தொடர்ந்து அடக்கி வைக்கும்போது சிறுநீர்ப்பை மீண்டும் சுருங்கும் நெகிழ்ச்சித்தன்மையை நிரந்தரமாக இழந்துவிடும். இதன் முற்றிய நிலையில், நோயாளிகள் தாமாகச் சிறுநீர் கழிக்க முடியாமல் ‘கதீட்டர்’ (Catheter) எனப்படும் குழாய் பொருத்த வேண்டிய கட்டாயம் ஏற்படும் என்று அவர் குறிப்பிட்டார்.
அத்துடன், சிறுநீரை நீண்ட நேரம் தேக்கி வைப்பது ‘சிறுநீர் பாதை தொற்று’ (UTI) ஏற்படும் அபாயத்தை வெகுவாக அதிகரிக்கும். சிறுநீர் பாதையில் இயல்பாகவே இருக்கும் பாக்டீரியாக்கள், சிறுநீர் கழிப்பதன் மூலம் வெளியேற்றப்படும். ஆனால், சிறுநீர் தேங்கும் போது பாக்டீரியாக்கள் அங்குப் பெருமளவில் பெருகி, கடுமையான தொற்று மற்றும் தாங்க முடியாத வழியை உண்டாக்குவதுடன், திரும்ப திரும்ப தாக்கும் அபாயத்தையும் ஏற்படுத்தும். ஏனெனில், சிறுநீரை வெளியேற விடாமல் கட்டுப்படுத்த இடுப்புப் பகுதித் தசைகள் அதிகளவில் இறுக்கமடைவதே இந்த வலிக்கு காரணம் ஆகும்.
மிக அரிதாக, சிறுநீர்ப்பை வெடித்து சிதையும் ஆபத்தும் உள்ளது. சிறுநீர்ப்பை உடைந்தால், வெளியேற வேண்டிய கழிவுநீர் வயிற்றுப் பகுதிக்குள் பரவிவிடும். இந்த ஆபத்தான சூழலை சரிசெய்ய உடனடி அறுவை சிகிச்சை செய்ய வேண்டியிருக்கும் என்றும் மருத்துவர் சுட்டிக்காட்டினார்.
எனவே, சிறுநீரகங்கள் மற்றும் சிறுநீர் பாதை சீராக இயங்கப் போதிய அளவு தண்ணீர் குடிப்பது எவ்வளவு அவசியமோ, அவ்வளவு அவசியமான ஒன்று சிறுநீர் கழிக்கும் உணர்வு வந்தவுடன் அதை உடனே வெளியேற்றுவதுதான். அதில் ஏதேனும் அசௌகரியம் அல்லது வலி ஏற்பட்டால் உடனடியாக மருத்துவரை அணுகி ஆலோசனையும் சிகிச்சையும் பெற வேண்டும் என்றும் டாக்டர் ராஜ்குமார் வலியுறுத்தியுள்ளார்.
Read More : 15 வயது சிறுமியை ஊர் ஊராக கூட்டிச் சென்று மாறி மாறி பலாத்காரம்..!! 4 பேர் மீது பாய்ந்தது போக்சோ..!!


