மேற்கு வங்கத்தில் கேஸ் சிலிண்டர் மானிய தொகையை சரிபார்க்க வங்கிக்கு சென்ற ஏழை பெண்ணின் கணக்கில் சுமார் 100 கோடி ரூபாய் டெபாசிட் செய்யப்பட்டு இருந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மேற்கு வங்க மாநிலம் தெற்கு 24 பர்கனாஸ் மாவட்டம் குல்தாலி பகுதியை சேர்ந்தவர் காஷ்மீரா ஷேக். ஜரி தையல் தொழில் செய்து வரும் இவர், மிகவும் எளிமையான குடும்ப பின்னணியை கொண்டவர். இந்நிலையில், மத்திய அரசின் சமையல் சிலிண்டருக்கான மானிய தொகை தனது வங்கி கணக்கில் வரவு வைக்கப்பட்டுள்ளதா என்பதை தெரிந்து கொள்ள விரும்பி, அங்குள்ள பஞ்சாப் நேஷனல் வங்கி கிளைக்கு சென்றுள்ளார்.
அங்கு பணியில் இருந்த வங்கி ஊழியரிடம் தனது கணக்கில் உள்ள இருப்பு தொகையை சரிபார்த்து சொல்லுமாறு அவர் கேட்டுக்கொண்டார். அப்போது அவரது கணக்கில் உள்ள தொகையை பார்த்த ஊழியர் பேரதிர்ச்சி அடைந்தார். காஷ்மீராவின் கணக்கில் ரூ. 99,99,99,997 (99 கோடியே 99 லட்சத்து 99 ஆயிரத்து 997 ரூபாய்) இருப்பு இருப்பது தெரியவந்தது. அதாவது சரியாக 100 கோடி ரூபாய்க்கு 3 ரூபாய் மட்டுமே குறைவாக இருந்தது.
இத்தகவல் அறிந்ததும் உடனடியாக செயல்பட்ட வங்கியின் உயர் அதிகாரிகள், அந்த வங்கி கணக்கை தற்காலிகமாக முடக்கினர். தொழில்நுட்ப கோளாறு காரணமாக தவறுதலாக இந்த தொகை வரவு வைக்கப்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படும் நிலையில், இது தொடர்பாக வங்கி அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
Read More : காவிரி விவகாரத்தில் அடுத்த பாய்ச்சல்..! இனியும் கெஞ்ச முடியாது..! சுப்ரீம் கோர்ட்டை நாடிய தமிழக அரசு..!



