காவிரி நீர் மேலாண்மை ஆணையத்தின் உத்தரவுகளை செயல்படுத்தாமல் இழுத்தடித்து வரும் கர்நாடக அரசு, தமிழகத்திற்கான காவிரி நீரை உடனடியாக திறக்க உத்தரவிட கோரி, உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு இன்று மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளது.
முன்னதாக, காவிரி நதிநீர்ச் சிக்கல் மற்றும் மேகதாது அணை விவகாரம் குறித்து சுமுகத் தீர்வு காண்பதற்காக, கர்நாடக முதல்வர் டி.கே. சிவகுமாரை சந்திக்க தமிழக முதல்வர் விஜய் திட்டமிட்டிருந்தார். இதற்காக தமிழக அரசு சார்பில் கடிதம் அனுப்பப்பட்டுத் தேதி குறிக்கப்பட்ட நிலையில், தற்போதுள்ள சூழலில் பெங்களூரு பயணத்தை தவிர்க்குமாறு கர்நாடக தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதன் தொடர்ச்சியாகவே, சட்டரீதியான நடவடிக்கையை தீவிரப்படுத்த தமிழக அரசு தற்போது உச்ச நீதிமன்றத்தை நாடியுள்ளது.
தமிழக அரசு தாக்கல் செய்துள்ள அந்த மனுவில், “காவிரி நீர் முறைப்படுத்தும் குழுவின் பரிந்துரைப்படி வினாடிக்கு 3,500 கன அடி வீதம் 15 நாட்களுக்குத் தண்ணீரை திறந்துவிட வேண்டும். தற்போது கர்நாடக மாநிலத்தில் உள்ள அணைகளில் சுமார் 77.537 டி.எம்.சி தண்ணீர் இருப்பு உள்ளதால், தமிழகத்திற்கு உரிய பங்கீட்டை வழங்க எவ்வித நடைமுறை சிக்கலும் இல்லை” என்று சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
மேலும், இதுவரை தமிழகத்திற்கு வழங்கப்பட வேண்டிய நிலுவை நீரை கணக்கிட்டு, “நடப்பு பருவத்தில் தமிழகத்திற்கு சேர வேண்டிய 26.954 டி.எம்.சி தண்ணீரைத் தாமதமின்றி உடனடியாக திறந்துவிட கர்நாடக அரசுக்கு உச்ச நீதிமன்றம் உரிய உத்தரவைப் பிறப்பிக்க வேண்டும்” என்றும் அந்த மனுவில் வலியுறுத்தப்பட்டுள்ளது. பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இந்த மனு மீதான விசாரணை விரைவில் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Read More : “என்ன மனுஷன்யா நீ!” ரசிகர்களை கவர்ந்த சூர்யாவின் அட்வைஸ்!



