வீட்டில் சாம்பார் செய்தாலும், ஹோட்டலில் கிடைக்கும் சுவை வரவில்லை என்று பலர் நினைப்பது வழக்கம். ஆனால், சமையல் நிபுணர்கள் கூறுவதன்படி, சாம்பாரின் சுவையை அதிகரிக்க பெரிய ரகசியம் எதுவும் இல்லை. சரியான பொருட்களை சரியான நேரத்தில் சேர்ப்பதே முக்கியம் என்கிறார்கள். அதில் முக்கியமான ஒன்று நெய். சாம்பார் இறக்குவதற்கு முன் ஒரு டீஸ்பூன் நெய்யை சேர்த்தால், அதன் நறுமணமும் சுவையும் கணிசமாக அதிகரிக்கும். பல உணவகங்களிலும் சாம்பாரை பரிமாறும் முன் சிறிதளவு நெய் சேர்ப்பது வழக்கமாக இருப்பதாக சமையல் கலை நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.
அதேபோல், வீட்டில் வறுத்து அரைத்த சாம்பார் பொடி பயன்படுத்துவது சுவையை மேம்படுத்தும். தனியா, மிளகாய், கடலைப்பருப்பு, வெந்தயம் மற்றும் சீரகத்தை லேசாக வறுத்து அரைத்தால், சாம்பாருக்கு தனித்துவமான மணமும் சுவையும் கிடைக்கும். சாம்பார் கொதித்து இறக்கும் நேரத்தில் கைப்பிடி அளவு நறுக்கிய கொத்தமல்லித்தழையை சேர்ப்பதும் சுவையை அதிகரிக்கும். அதேபோல், தாளிப்பில் நல்லெண்ணெய் அல்லது நெய் பயன்படுத்தி கடுகு, சீரகம், பெருங்காயம், கறிவேப்பிலை மற்றும் காய்ந்த மிளகாய் தாளித்து சேர்த்தால் சாம்பார் இன்னும் மணமாக இருக்கும்.
சாம்பார் செய்தவுடன் உடனே பரிமாறாமல், 15 முதல் 20 நிமிடங்கள் மூடி வைத்த பிறகு பரிமாறினால், மசாலா மற்றும் புளியின் சுவை ஒன்றோடொன்று நன்றாக கலந்துவிடும். இதனால் சாம்பார் இன்னும் சுவையாக இருக்கும் என சமையல் நிபுணர்கள் கூறுகின்றனர். சிறிய மாற்றங்களே சமையலில் பெரிய வித்தியாசத்தை ஏற்படுத்தும். எனவே, அடுத்த முறை சாம்பார் செய்யும்போது இந்த எளிய குறிப்புகளை முயற்சி செய்து பார்த்தால், ஹோட்டல் சுவைக்கு நிகரான சாம்பாரை வீட்டிலேயே தயாரிக்க முடியும்.
Also Read: சிறுநீரை அடக்கி வைக்கும் பழக்கம் இருக்கா..? மருத்துவ நிபுணர்கள் பகீர் தகவல்..!!



