ஒரு காலத்தில், குழந்தைக்காக தனது உயிரையே தியாகம் செய்யத் தயங்காத தாய்மார்கள் பலர் இருந்தனர். ஆனால், இன்றைய காலகட்டத்தில் குடும்பச் சிக்கல்கள், மனநலப் பிரச்சினைகள் மற்றும் பிற காரணங்களால் சில துயரச் சம்பவங்கள் அரங்கேறுவது சமூகத்தில் பெரும் கவலையை ஏற்படுத்தி வருகிறது. மத்தியப் பிரதேசத்தில் நடந்த இந்தச் சம்பவமும் பலரது மனதை உலுக்கியுள்ளது. மத்தியப் பிரதேச மாநிலத்தின் பேல்கி கிராமத்தில் பிறந்து ஐந்து நாட்களே ஆன பெண் குழந்தை உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
வீட்டின் குளியல் பகுதியில் இருந்த தண்ணீர் நிரப்பப்பட்ட டிரம்மில் குழந்தையின் உடல் கண்டெடுக்கப்பட்டதைத் தொடர்ந்து, போலீசார் விசாரணையைத் தொடங்கினர். முதலில் மர்ம மரணமாக வழக்குப் பதிவு செய்யப்பட்ட நிலையில், சம்பவ இடத்தில் சேகரிக்கப்பட்ட தடயங்கள், குடும்ப உறுப்பினர்களிடம் நடத்தப்பட்ட விசாரணை மற்றும் பிரேதப் பரிசோதனை முடிவுகள் ஆகியவற்றின் அடிப்படையில் வழக்கின் திசை மாறியது. பிரேதப் பரிசோதனையில், தண்ணீரில் மூழ்கியதால் ஏற்பட்ட மூச்சுத்திணறலே குழந்தையின் உயிரிழப்புக்குக் காரணம் என்பது உறுதியானது.
இதையடுத்து, 21 வயதான குழந்தையின் தாய் சோனு பட்டேலிடம் போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தினர். விசாரணையில், பிரசவத்திற்குப் பிறகு ஏற்பட்ட மனஅழுத்தம் மற்றும் குழந்தையை வளர்ப்பது குறித்த கவலை காரணமாக அந்த முடிவை எடுத்ததாக அவர் தெரிவித்ததாக கூறப்படுகிறது. பின்னர், வீட்டில் இருந்த தண்ணீர் டிரம்மில் குழந்தையை மூழ்கடித்ததாக விசாரணையில் தெரியவந்ததைத் தொடர்ந்து, போலீசார் அவரைக் கைது செய்தனர்.
கைது செய்யப்பட்ட சோனு பட்டேல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டுள்ளார். இந்தச் சம்பவத்தின் பின்னணி மற்றும் பிற காரணங்கள் குறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.



