தனது இயல்பான நடிப்பாலும், கதாபாத்திரத் தேர்விலும் தனித்துவத்தை நிரூபித்து இந்திய சினிமாவில் தனக்கென ஒரு இடத்தைப் பிடித்திருப்பவர் நடிகை சாய் பல்லவி. அவர் ஏற்றுக்கொள்ளும் ஒவ்வொரு கதாபாத்திரமும் ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தும் நிலையில், ராமாயணத்தில் சீதையாக அவர் தேர்வானது குறித்து பரவிய வதந்திகளுக்கு தற்போது கேஜிஎஃப் நடிகை ஸ்ரீநிதி ஷெட்டி முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.
இயக்குநர் நிதிஷ் திவாரி இயக்கத்தில் உருவாகி வரும் ‘ராமாயணம்’ திரைப்படத்தில் சீதை கதாபாத்திரத்தில் சாய் பல்லவி நடித்து வருகிறார். இந்த அறிவிப்பு வெளியானதிலிருந்தே சமூக வலைதளங்களில் பல்வேறு விமர்சனங்களும், விவாதங்களும் எழுந்தன. அதிலும் குறிப்பாக, சீதை கதாபாத்திரத்தில் நடிக்க முதலில் கேஜிஎஃப் நடிகை ஸ்ரீநிதி ஷெட்டிக்கு வாய்ப்பு வழங்கப்பட்டதாகவும், அவர் அந்த வாய்ப்பை நிராகரித்த பிறகே சாய் பல்லவி தேர்வு செய்யப்பட்டதாகவும் தகவல்கள் பரவின.
இந்த வதந்திகள் குறித்து தற்போது ஸ்ரீநிதி ஷெட்டி விளக்கம் அளித்துள்ளார். அதில், சீதையாக நடிக்க தனக்கும் ஆடிஷன் நடைபெற்றது உண்மைதான். ஆனால், அந்த ஆடிஷனில் தேர்ச்சி பெற முடியவில்லை. வாய்ப்பை நான் நிராகரிக்கவில்லை என்று அவர் வெளிப்படையாக தெரிவித்துள்ளார். ஸ்ரீநிதி ஷெட்டியின் இந்தப் பதிலால், சாய் பல்லவி சீதை கதாபாத்திரத்தை எளிதாகப் பெறவில்லை என்பதும், ஆடிஷன் மூலம் தனது திறமையை நிரூபித்த பிறகே அந்த வாய்ப்பு அவருக்கு கிடைத்தது என்பதும் தெளிவாகியுள்ளது.
இதையடுத்து, சமூக வலைதளங்களில் சாய் பல்லவிக்கு ஆதரவாக ரசிகர்கள் கருத்துகளை பதிவிட்டு வருகின்றனர். பல முன்னணி நடிகைகள் போட்டியிட்ட கதாபாத்திரத்தில் சாய் பல்லவி தேர்வாகியிருப்பது அவரது நடிப்பு திறமைக்குக் கிடைத்த அங்கீகாரம் என ரசிகர்கள் பாராட்டி வருகின்றனர்.
Also Read: கள்ளக்காதலால் சிதைந்த குடும்பம்… மனைவியை சரமாரியாக தாக்கிவிட்டு 2 குழந்தைகளுடன் மாயமான கணவர்


