உலகளவில் மனித உயிர்களை பறிக்கும் கொடிய நோய்களில் முதன்மையாக விளங்கும் புற்றுநோயை, அது உடலுக்குள் உருவாவதற்கு 8 ஆண்டுகளுக்கு முன்பே ஒரு சாதாரண ரத்தப் பரிசோதனை மூலம் துல்லியமாக கண்டறிய முடியும் என்பதை ஆக்ஸ்போர்டு மற்றும் டொராண்டோ பல்கலைக்கழக விஞ்ஞானிகள் கூட்டாக கண்டறிந்துள்ளனர். இந்த வரலாற்று சிறப்புமிக்க கண்டுபிடிப்பு, மருத்துவ உலகிலும் புற்றுநோய் சிகிச்சையிலும் மாபெரும் திருப்புமுனையை ஏற்படுத்தியுள்ளது.
பொதுவாக புற்றுநோய் முற்றிய நிலையிலேயே கண்டறியப்படுவதால் உயிரிழப்புகள் அதிகரித்து வரும் சூழலில், ஆரம்ப நிலையிலேயே அடையாளம் கண்டால் முழுமையாகக் குணப்படுத்திவிட முடியும். தற்போது நடைமுறையில் உள்ள ‘பாப் ஸ்மியர்’ அல்லது கதிர்வீச்சு ஸ்கேன் முறைகளுக்கு மாற்றாக, ‘திரவ பயாப்ஸி’ (Liquid Biopsy) எனப்படும் ரத்த மாதிரிகளை வைத்து விஞ்ஞானிகள் தீவிர ஆய்வு மேற்கொண்டனர். ‘ஒன்டாரியோ நல வாழ்வு ஆய்வில்’ பங்கேற்ற 491 ஆரோக்கியமான நபர்களின் பழைய ரத்த மாதிரிகளைப் பரிசோதித்ததில், புற்றுநோய் பாதிப்பு ஏற்படுவதற்குப் பல ஆண்டுகளுக்கு முன்பே டி.என்.ஏ-வில் ஏற்படும் ‘மெத்திலேஷன்’ (Methylation) எனும் வேதியியல் மாற்றங்களை அவர்கள் துல்லியமாகக் கண்டறிந்துள்ளனர்.
குறிப்பாக, ஆண்களை அச்சுறுத்தும் புரோஸ்டேட் புற்றுநோயை அது வெளிப்படுவதற்கு 5 முதல் 8 ஆண்டுகளுக்கு முன்பே, டி.என்.ஏ-வின் சைலன்சர் பகுதிகளில் ஏற்படும் மாற்றங்களை வைத்து முன்கூட்டியே கணிக்க முடிந்துள்ளது. அதேபோல் பெண்களைத் தாக்கும் மார்பகப் புற்றுநோயை 1.5 முதல் 8 ஆண்டுகளுக்கு முன்பே அடையாளம் காணும் சாத்தியக்கூறும் உறுதியாகியுள்ளது.
புகழ்பெற்ற ‘செல் ஜீனோமிக்ஸ்’ (Cell Genomics) அறிவியல் இதழில் வெளியாகியுள்ள இந்த ஆய்வு குறித்து விளக்கிய ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகப் பேராசிரியர் ஃபிலிப் அவதல்லா, “உடலில் கட்டிகள் உருவான பிறகு சிகிச்சையைத் தொடங்குவதை விட, நோய் உருவாகும் உடலியல் மாற்றங்களை முன்கூட்டியே கணித்து உயிர்களைக் காப்பாற்றுவதில் இது உலக மருத்துவ வரலாற்றின் மிக முக்கிய மைல்கல்” என்று பெருமிதத்தோடு தெரிவித்துள்ளார்.
Read More : அரிசி விலை கிடுகிடு உயர்வு! மூட்டைக்கு ரூ.500 வரை எகிறியது! கிலோ ரூ.100-ஐ தொடும் அபாயம்!



