அசாமின் ஹைலாகண்டி மாவட்டத்தில் 16 வயது பள்ளி மாணவி கொடூரமாக பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பாட்டியின் இறுதிச்சடங்கிற்காக தாயும் சகோதரரும் வெளியே சென்றிருந்த நேரத்தில், வீட்டில் தனியாக இருந்த சிறுமி கொடூரமாக தாக்கப்பட்டு உயிரிழந்துள்ளார். ஆகஸ்ட் 1ஆம் தேதி இரவு இந்த சம்பவம் நடந்துள்ளது. சிறுமியின் தந்தை சில ஆண்டுகளுக்கு முன்பே உயிரிழந்துவிட்டார். அவரது சகோதரர் அசாம் மாநிலத்திற்கு வெளியே வேலை செய்து வருகிறார்.
சம்பவத்தன்று, சிறுமியின் தாயும் சகோதரரும் பாட்டியின் இறுதிச்சடங்கில் கலந்து கொள்வதற்காக வெளியே சென்றிருந்ததால், சிறுமி மட்டும் வீட்டில் தனியாக இருந்துள்ளார். அப்போது சிறுமி தனது காதலர்களில் ஒருவரிடம், வீட்டில் யாரும் இல்லை என்று தொலைபேசியில் கூறியுள்ளார். இதையடுத்து அந்த இளைஞர் தனது இரண்டு நண்பர்களுடன் சிறுமியின் வீட்டிற்கு சென்றுள்ளார். அங்கு சிறுமி மற்றொரு இளைஞருடன் தொலைபேசியில் பேசிக்கொண்டிருப்பதை பார்த்துள்ளனர்.
சிறுமிக்கு இரண்டு காதலர்கள் இருப்பது தெரியவந்ததால், அவர்களுக்கிடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து மற்றொரு காதலனும் தனது நண்பருடன் சிறுமியின் வீட்டிற்கு வந்துள்ளார். அங்கு ஏற்பட்ட மோதல் சிறிது நேரத்தில் கொடூரமாக மாறியுள்ளது. இரண்டு காதலர்கள் உட்பட 5 பேரும் சேர்ந்து சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். பின்னர் சிறுமியை கடுமையாக தாக்கியதுடன், செங்கல்லால் தலையிலும் தாக்கியுள்ளனர். இந்த தாக்குதலில் படுகாயமடைந்த சிறுமி உயிரிழந்துள்ளார்.
பாட்டியின் இறுதிச்சடங்கில் பங்கேற்றுவிட்டு வீடு திரும்பிய தாயும் சகோதரரும், சிறுமி ரத்த வெள்ளத்தில் கிடந்ததை பார்த்து அதிர்ச்சியடைந்தனர். உடனடியாக போலீசாருக்கு தகவல் அளிக்கப்பட்டது. சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்திய போலீசார், 16 வயது சிறுவன் உட்பட 5 பேரை கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்டவர்கள் மின்சார ஆட்டோ மற்றும் ரிக்ஷா ஓட்டுநர்களாக பணியாற்றி வந்தவர்கள். இரண்டு காதலர்களுக்கு இடையேயான பிரச்சினை இறுதியில் 16 வயது பள்ளி மாணவியின் உயிரையே பறித்திருப்பது அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சம்பவத்தில் தொடர்புடைய அனைவருக்கும் கடுமையான தண்டனை வழங்க வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்துள்ளது.
Also Read: ஓடும் பைக்கிலேயே பிறந்த குழந்தை!… பிரசவ நேரத்தில் கணவர் செய்த காரியம்; வைரலாகும் வீடியோ!



