ஒரு இளம்பெண்ணின் வாழ்க்கை, நெருக்கமாக பழகிய ஒருவருடனான உறவு கொடூரமான கொலையில் முடிந்துள்ளது. ஆந்திரப் பிரதேசத்தின் விசாகப்பட்டினத்தில் இளம்பெண்ணை கொலை செய்துவிட்டு, அவரது உடலை சூட்கேஸில் மறைத்து ஒடிசாவுக்கு ரயிலில் கொண்டு சென்று வீசிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த வழக்கில் டிரைவரான போலிசெட்டி சுரேஷை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
சுரேஷின் மனைவி கர்ப்பமாக இருந்த காலத்தில், வீட்டு வேலைகளுக்கு உதவுவதற்காக இளம்பெண் ஒருவர் பணிக்கு வந்துள்ளார். அப்போது சுரேஷுக்கும் அந்த இளம்பெண்ணுக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது. நாளடைவில் இந்த பழக்கம் நெருக்கமாக மாறியுள்ளது. சுரேஷின் மனைவி தனது பெற்றோர் வீட்டில் தங்கியிருந்த நேரத்தில், இளம்பெண் சுரேஷை திருமணம் செய்து கொள்ளுமாறு வலியுறுத்தியுள்ளார். இதனால் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
வாக்குவாதம் முற்றிய நிலையில், சுரேஷ் இளம்பெண்ணை தாக்கியுள்ளார். இதில் அவர் உயிரிழந்துள்ளார். இதையடுத்து கொலையை மறைக்க திட்டமிட்ட சுரேஷ், இளம்பெண்ணின் உடலை ஒரு பெரிய சூட்கேஸுக்குள் வைத்து மூடியுள்ளார். பின்னர் சூட்கேஸுடன் ரயிலில் ஒடிசா மாநிலம் ராயகடா பகுதிக்கு சென்ற சுரேஷ், மக்கள் நடமாட்டம் குறைவாக இருந்த பகுதியில் சூட்கேஸை வீசிவிட்டு மீண்டும் விசாகப்பட்டினம் திரும்பியுள்ளார்.
ராயகடா பகுதியில் கிடந்த சூட்கேஸை பொதுமக்கள் கண்டுபிடித்து போலீசாருக்கு தகவல் அளித்தனர். இதையடுத்து உடலை கைப்பற்றி விசாரணையை தொடங்கிய போலீசார், கிடைத்த தடயங்களை வைத்து விசாகப்பட்டினத்தைச் சேர்ந்த சுரேஷை அடையாளம் கண்டனர். இதையடுத்து ஒடிசா போலீசார் விசாகப்பட்டினம் சென்று சுரேஷை கைது செய்தனர். சம்பவம் தொடர்பாக ஆந்திரா மற்றும் ஒடிசா போலீசார் இணைந்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Also Read: 2 காதலர்கள்… 5 பேர்!… 16 வயது சிறுமிக்கு நேர்ந்த கொடூரம்!



