பிள்ளைகளுக்காக காத்திருந்த 57 வயது தாய்… 1½ ஆண்டுகளுக்குப் பிறகு வீட்டில் எலும்புக்கூடாக மீட்பு!

acfa4a99e7b5cef50f339ba193fea4d4 1 1

பெற்றோர் வயதாகும்போது அவர்களுக்கு துணையாக இருப்பது பிள்ளைகள்தான் என்ற எதிர்பார்ப்பு பல குடும்பங்களிலும் இருக்கும். ஆனால், வாழ்க்கையின் வேகத்தில் சில நேரங்களில் வயதான பெற்றோருடன் பிள்ளைகள் தொடர்ந்து தொடர்பில் இருப்பதை மறந்துவிடுகிறார்கள். பிள்ளைகளின் வருகைக்காகவும் ஒரு வார்த்தைக்காகவும் காத்திருக்கும் பெற்றோரின் தனிமை கவனிக்கப்படாமல் போகும்போது, அது எவ்வளவு வேதனையான நிலைக்கு வழிவகுக்கும் என்பதற்கு பெங்களூருவில் நடந்த இந்த சம்பவம் அதிர்ச்சி உதாரணமாகியுள்ளது.


பெங்களூரு பாகலகுண்டே போலீஸ் எல்லைக்குட்பட்ட ஹவனூர் லே-அவுட்டில் நீண்ட நாட்களாக பூட்டியே கிடந்த வீட்டில் இருந்து துர்நாற்றம் வீசியதை அடுத்து அக்கம்பக்கத்தினர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் வீட்டுக்குள் சென்று சோதனை செய்தபோது, கழிவறையில் எலும்புக்கூடுகள் கிடந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

போலீசார் மேற்கொண்ட விசாரணையில், அந்த எலும்புக்கூடுகள் பெலகாவி மாவட்டம் சவதத்தியைச் சேர்ந்த தாட்சாயினி (57) என்பவருடையது என்பது தெரியவந்தது. அவர் அந்த வீட்டில் தனியாக வசித்து வந்துள்ளார். கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கும் மேலாக வீட்டை விட்டு வெளியே வராமல் இருந்ததாகவும், அவர் சொந்த ஊருக்குச் சென்றிருக்கலாம் என அக்கம்பக்கத்தினர் நினைத்ததாகவும் விசாரணையில் தெரியவந்துள்ளது.

தாட்சாயினியின் வாழ்க்கையில் ஏற்கனவே பல இழப்புகள் ஏற்பட்டிருந்தன. அவரது மகன் கடந்த 2005-ம் ஆண்டு உயிரிழந்த நிலையில், கணவர் 2017-ம் ஆண்டு இறந்துள்ளார். இதனால் அவர் தனியாக வசித்து வந்துள்ளார். மேலும், லேசான மனநல பாதிப்புக்காக சிகிச்சையும் பெற்று வந்ததாக உறவினர்கள் போலீசாரிடம் தெரிவித்துள்ளனர்.

தாட்சாயினியின் சகோதரர் மகேஷிடம் போலீசார் விசாரணை நடத்தியபோது, கடந்த 2 ஆண்டுகளாக அவருடன் பேசவில்லை என்றும், ஓராண்டுக்கும் மேலாக உறவினர்களுடனும் அவருக்கு தொடர்பு இல்லை என்றும் தெரிவித்துள்ளார். இதனால் தாட்சாயினி எப்போது உயிரிழந்தார் என்பது கூட நீண்ட காலமாக யாருக்கும் தெரியாமல் போயுள்ளது.

வீடு நீண்ட நாட்களாக பூட்டியே கிடந்ததால், பலரும் அதை வாடகைக்கு கேட்டு வந்துள்ளனர். ஆனால், வீட்டின் உரிமையாளரை எவ்வாறு தொடர்புகொள்வது என்பது தெரியாமல் அவர்கள் திரும்பிச் சென்றுள்ளனர். இந்நிலையில், வீட்டில் இருந்து துர்நாற்றம் வீசிய பிறகே அக்கம்பக்கத்தினர் போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.

தாட்சாயினியின் மரணத்தில் குடும்பத்தினருக்கு சந்தேகம் இல்லை என்றாலும், கழிவறையில் எலும்புக்கூடுகள் கிடைத்திருப்பதால் போலீசார் இதை இயற்கைக்கு மாறான மரணம் என்ற கோணத்தில் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். தாட்சாயினி எப்போது, எப்படி உயிரிழந்தார் என்பதற்கான காரணத்தை கண்டறிய போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Also Read: கள்ளக்காதலனுடன் சேர்ந்து கணவரை கொன்ற மனைவி… 6 மாதங்களுக்கு பிறகு வெளியான அதிர்ச்சி உண்மை!

Saranya

Next Post

AGS அர்ச்சனா கல்பாத்திக்கு தமிழக அரசு பதவி..!! முதல்வர் விஜய் அதிரடி உத்தரவு..!!

Mon Aug 10 , 2026
தமிழ் திரையுலகின் பிரபல தயாரிப்பு நிறுவனமான ஏஜிஎஸ் என்டர்டெயின்மென்டின் (AGS Entertainment) தலைமைச் செயல் அதிகாரி அர்ச்சனா கல்பாத்திக்கு தமிழக அரசு புதிய பொறுப்பு ஒன்றை வழங்கியுள்ளது. இந்து சமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டின் கீழ் இயங்கும், ஆண்டிற்கு 10 லட்சம் ரூபாய்க்கும் மேல் வருவாய் கொண்ட திருக்கோவில்களுக்குப் பரம்பரை முறைசாரா அறங்காவலர்களை நியமிப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதற்காக தகுதியான நபர்களை தேர்வு செய்து அரசுக்கு பரிந்துரைக்கும் வகையில் மாநில […]
AGS Archana Kalpathi 2026

You May Like