சென்னை, காஞ்சிபுரம் மாவட்டங்களில் உள்ள ரேஷன் கடைகளில் வேலை நேரத்தை மாற்றி அமைப்பது குறித்து விரிவான ஆய்வு மேற்கொண்டு அறிக்கை அளிக்குமாறு கூட்டுறவுத்துறை உத்தரவிட்டுள்ளது.
இது தொடர்பாகக் கூட்டுறவுத்துறை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், தமிழ்நாடு அரசு ரேஷன் கடை பணியாளர் சங்கம் முன்வைத்துள்ள கோரிக்கைகள் சுட்டிக்காட்டப்பட்டுள்ளன. தற்போது நிலவும் நடைமுறைப்படி, சென்னை மற்றும் காஞ்சிபுரம் மாவட்டங்களில் காலை 8.30 மணி முதல் பிற்பகல் 2.30 மணி வரையிலும், மீண்டும் பிற்பகல் 3.00 மணி முதல் மாலை 7.00 மணி வரையிலும் கடைகள் செயல்படுகின்றன.
இதனால் மதிய வேளையில் சுமார் இரண்டரை மணி நேரம் இடைவெளி ஏற்படுவதால், பணியாளர்கள் தேவையின்றி நீண்ட நேரம் காத்திருக்க நேரிட்டு மனச்சோர்வுக்கும் மன உளைச்சலுக்கும் ஆளாகி வருவதாக பணியாளர் சங்கம் தெரிவித்துள்ளது. மேலும் விடுமுறை நாட்களிலும் குளறுபடிகள் நீடிப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
நுகர்பொருள் வாணிபக் கழகத்தின் கிடங்குகளுக்கு வெள்ளிக்கிழமை வேலை நாளாகவும், ஞாயிற்றுக்கிழமை விடுமுறையாகவும் உள்ளது. ஆனால், ரேஷன் கடை பணியாளர்களுக்கோ வெள்ளிக்கிழமை விடுமுறையாகவும், ஞாயிற்றுக்கிழமை பணி நாளாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக விடுமுறை நாட்களை இருதரப்பு ஊழியர்களாலும் முழுமையாகப் பயன்படுத்த முடியாத சூழல் நிலவுகிறது.
எனவே, இந்த பிரச்சனைகளுக்குத் தீர்வு காணும் வகையில், வேலை நேரத்தை காலை 8.00 மணி முதல் பிற்பகல் 1.00 மணி வரையிலும், பின்னர் பிற்பகல் 2.00 மணி முதல் மாலை 6.00 மணி வரையிலும் மாற்றி அமைக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது. அதேபோல, மாதத்தின் முதல் இரண்டு வெள்ளிக்கிழமைகளை வேலை நாட்களாகவும், முதல் இரண்டு ஞாயிற்றுக்கிழமைகளை விடுமுறை நாட்களாகவும் அறிவிக்க வேண்டும் என்ற கோரிக்கையும் முன்வைக்கப்பட்டுள்ளது. இக்கோரிக்கைகள் தொடர்பாக உரிய ஆய்வு மேற்கொண்டு குறிப்புகளை அனுப்பி வைக்குமாறு கூட்டுறவுச் சங்கங்களின் பதிவாளர் அலுவலகத்திற்கு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
Read More : AGS அர்ச்சனா கல்பாத்திக்கு தமிழக அரசு பதவி..!! முதல்வர் விஜய் அதிரடி உத்தரவு..!!



